![udhayanithi -speaks about- edappadi palanisamy -trichy](http://image.nakkheeran.in/cdn/farfuture/k20-GXhWtvmuDcss2bqA-ZPGtU6xrm4hPHgVwxMLjRI/1609157355/sites/default/files/inline-images/udhaya_0.jpg)
‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ எனும் தேர்தல் பிரச்சாரத்தைச் செய்து வரும் தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இன்று காலை மணப்பாறை பகுதியில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை நடத்திவருகிறார்.
திருச்சி மாநகரப் பகுதிக்குள் டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் பிரச்சாரம் செய்து பேசிய உதயநிதி, “நீண்ட நேரம் காக்க வைத்ததற்காக மன்னிக்கவும். பேசுவதற்கு 15 இடங்களில் திட்டமிட்டோம். ஆனால், பல இடங்களில் வண்டியை நிறுத்திப் பேசிவிட்டுத்தான் போகவேண்டும் என்று, மக்கள் ஆசையோடு கேட்டதினால் இந்தக் கால தாமதம். கலைஞர் வீட்டு வாசலில் ஆரம்பித்து இன்று 16வது நாளாகத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடர்ந்து வருகிறேன். முதல் மூன்று நாளும் தொடர்ந்து கைதுசெய்து வந்தனர். அதிலும் காவல்துறை மிகுந்த பாசத்தோடு இருந்தார்கள். யாரைக் கைது செய்தாலும் அவர்கள் எல்லாம் வீட்டுக்குப் போய்விடுவார்கள். ஆனால், நீங்கள் பிரச்சாரத்துக்குப் செல்கிறீர்கள் என்று காவல்துறை கூறுகிறார்கள்” எனக் கிண்டலாகப் பேசினார்.
மேலும் அவர், “சசிகலா காலை பிடித்து முதலமைச்சர் ஆன கதை எல்லாருக்கும் தெரியும். எடப்பாடி பழனிசாமி, ஒரு மிகப் பெரிய ஊழலைச் செய்திருக்கிறார். சாலை ஒப்பந்தம் விட்டதில் 6,000 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார். அமைச்சர் துரைக்கண்ணு இறப்பில், 800 கோடி ரூபாய் பணத்தைப் பெற்றதும்தான், அவருடைய உடலை இறுதிச் சடங்கிற்காகக் கொடுத்திருக்கிறார்கள். அ.தி.மு.க. என்றால் அண்ணா தி.மு.க. அல்ல, அடிமை தி.மு.க.
டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்ட உதயநிதி, அடுத்ததாக பாலக்கரை பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகில் பொது மக்களிடம் நேரடியாகப் பேசி வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், "மத்திய அரசு தொடர்ந்து விருது கொடுப்பதற்காக, தன்னை அழைக்கிறது என எடப்பாடி கூறுகிறார். ஆனால், யார் சிறந்த அடிமை என்ற விருதை எடப்பாடிக்குக் கொடுக்க முடியும் என்றார். தொடர்ந்து பேசுகையில், முதலமைச்சராக்கிய சசிகலாவை எடப்பாடி துரத்தினார். அதேபோல, தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கும்போது, நான் இன்னும் டிவி பார்க்கவில்லை எனக் கூறினார்" இவ்வாறு பேசினார்.