புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், எரிவாயு, பெட்ரோல், டீசல் விலைஉயர்வை ரத்து செய்யக்கோரியும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் 26.12.20 அன்று காலை 10 மணியளவில் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்யக்கோரியும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் 26.12.20 அன்று காலை 10 மணியளவில் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.
மோடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லியில் மாபெரும் போராட்டத்தை விவசாயிகள் நடத்திக்கொண்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு, ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள், மருத்துவர்கள் எனப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைக்காக அறிஞர்கள் பலரும் தாங்கள் பெற்ற விருதுகளையும் திருப்பி அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறப்போவதில்லை என, மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் திமிராகப் பதிலளித்துள்ளது கண்டனத்துக்குரியது. விவசாயிகள் கடந்த 29 நாட்களாகப் பனியிலும், பட்டினியிலும் இரவு பகல் பாராமல் போராடி வரும் நிலையில், மத்திய அமைச்சர் தோமரின் பேச்சு, அரசின் ஆணவத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்-ன் அறிவுரையின் பெயரில் மோடி, புதிய வேளாண் சட்டங்களை நியாயப்படுத்திப் பேசி வருகிறார். அதுமட்டுமின்றி, விவசாயிகளின் போராட்டத்தினைக் கண்டு அஞ்சி நடுங்கும் மோடி அரசு, போராட்டத்திற்குப் பெருகும் ஆதரவினை தடுக்க முடியாததால், நரித்தனமாகப் போராடும் விவசாயிகளின் மீதான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் மீது போர் தொடுத்துள்ள மோடி அரசு, மறுபுறம், எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை உயர்த்தி நாட்டு மக்கள் மீது போரை நிகழ்த்தியுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் வரை ரூ. 610 -ஆக இருந்த எரிவாயு சிலிண்டர் விலை, தற்போது ரூ.710-ஆக உயர்த்துள்ளது. டிசம்பர் மாதத்தில் மட்டும் இரு கட்டங்களாக எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றம் சாமானியர்களைக் கடுமையாகப் பாதிக்கும்.
எரிவாயு விலை உயர்வு ஒருபுறமிருக்க, ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட ரூ.90-ஐ நெருங்கிவிட்டது பெட்ரோல் விலை. பெட்ரோல் விலை, டீசல் விலை உயர்வு நேரடியாக, நாட்டு மக்களைப் பாதிக்கும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், கலால் வரியைக் குறைக்காமல், பாஜக அரசு உயர்த்தியே வந்துள்ளது. இதன் காரணமாகவே, பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை, எரிவாயு சிலிண்டர் உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
எனவே, புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரியும், எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்யக்கோரியும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 26.12.2020 அன்று காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்திற்கு, பொதுமக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.