விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தின் வெற்றிக்கு உழைத்ததில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோரின் பெரும் பங்கு இருந்தது. அந்தப்படம் குறித்து அவர்கள் கூறிய கருத்துக்கள், எதிர்ப்புகள் அந்தப்படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவின.
இந்நிலையில் மீண்டும் விஜய் நடித்து சர்கார் திரைக்கு வந்துள்ள சூழ்நிலையில் தமிழிசையும், எச்.ராஜாவும் கூறியுள்ள கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ’’கள்ளக்கதை மூலம் படம் எடுப்பவர்கள் கள்ள ஓட்டு பற்றி படம் எடுத்திருக்கிறார்கள். சினிமாவில் விஜய் நேர்மையாக இருக்க வேண்டும். இது கார்ப்பரேட்களுக்கான ஆட்சி இல்லை. காமன்மேன்களுக்கான ஆட்சி. முதல்வர் கனவோடு நடிக்கிறவர்கள் திரையில்தான் ஆட்சி செய்ய முடியும். சினிமாவில்தான் சர்கார் அமைக்க முடியும்; நிஜத்தில் முடியாது’’என்று தமிழிசை கடுமையாக தாக்கியிருந்தார்.
இந்நிலையில் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில்,
’படித்ததில் பிடித்தது.
கதையை திருடுறதுன்னு முடிவு
பண்ணிட்டா
நல்ல கதையா திருடுங்கடா’ - என்று பதிவிட்டுள்ளார்.
கதை திருட்டு விவகாரத்தில் சிக்கி, செங்கோல் கதையின் கருவும், சர்கார் கதையின் கருவும் ஒன்றுதான் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசும் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், தமிழிசையும், எச்.ராஜாவும் கூறியிருப்பது சர்கார் குறித்த விமர்சனம்தான் என்று கூறப்படுகிறது.