ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தமிழ்நாடு சட்டமன்றம் கூடுவது வழக்கம். ஆண்டின் முதல் கூட்டத்தில் மாநிலத்தின் ஆளுநர் பங்கேற்று உரையாற்றுவது வழக்கம். இது ஒவ்வொரு வருடம் நிகழும் நிகழ்வுதான் என்றாலும், இந்தமுறை அரசியலை கூர்ந்து நோக்குவோரிடத்திலும், பொதுமக்களிடத்திலும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டம் கூட்டுவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம், இந்த ஆண்டாவது அரசு தயாரித்துத் தரும் உரையை ஆளுநர் ஆர்.என். ரவி வாசிப்பாரா? அல்லது கடந்த ஜனவரியில் உரையை மாற்றிப் படித்ததன் மூலம், அரசின் பெரும் கண்டனத்தைச் சந்தித்து, பாதியிலேயே சபையில் இருந்து எழுந்து சென்றது போல், இப்போதும் ஆளுநர் ரவி நடந்துகொள்வாரா? என்கிற விவாதமும் எதிர்பார்ப்பும் பல தரப்பிலும் எழுந்திருக்கிறது.
இதே விவாதம் ஆளுநரின் ராஜ்பவன் அதிகாரிகள் மத்தியிலும் நடந்து வருகிறதாம். ஆளுநருக்கு நெருக்கமான உயரதிகாரிகள் சிலர், இந்தமுறை உச்ச நீதிமன்றத்தின் பார்வை நம் பக்கம் திரும்பியிருப்பதால், பிரச்சனைக்கு இடம்கொடுக்காமல், தி.மு.க. அரசு தயாரித்துத் தரும் உரையை நீங்கள் அப்படியே படிப்பதுதான் நல்லது என்று அறிவுறுத்தி வருகிறார்களாம். ஆனாலும் இதற்கு ஆளுநர் எந்த ரியாக்ஷனையும் காட்டவில்லை எனவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இன்று திருச்சி சர்வதேச விமான முனையம் திறப்பு விழா மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சரும், ஆளுநரும் ஒன்றாக கலந்துக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் உள்ள மசோதக்கள் குறித்து ஆலோசிப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஆளுநரின் அழைப்பை ஏற்று சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை ராஜ்பவனில் சந்தித்தார். அப்போது ஆளுநர் வாசல் வரை வந்து முதல்வரை வரவேற்றதும் குறிப்பிடத்தக்கது.