Skip to main content

“காலில் விழுந்து காலை வாரி..” - திருச்சியில் பண்ருட்டி ராமச்சந்திரன் விளாசல்

Published on 24/04/2023 | Edited on 24/04/2023

 

"Falling on my feet and morning." Panrutti Ramachandran  in Trichy

 

தனது பலத்தை நிரூபிக்கவும் அதிமுகவின் முப்பெரும் விழாவினைக் கொண்டாடவும் திருச்சியில் மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தார் ஓபிஎஸ். திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நடந்த இந்த மாநாட்டில் பல்லாயிரக்கணக்கில் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

 

மாநாட்டில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், “இது வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு. திருச்சியில் 1956 ஆம் ஆண்டு அண்ணா வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டை நடத்தினார்கள். அப்போதும் அந்த மாநாட்டிற்கு வந்துள்ளேன். இப்பொழுது 67 ஆண்டுகள் கழித்து இதே திருச்சியில் மாநாடு நடக்கும் போது 86 வயதான நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 

அரசியல் தலைவருக்கு வேண்டிய அடிப்படை குணமே நம்பிக்கைக்கு உரியவராக இருப்பது தான். மண்டியிட்டு காலில் விழுந்து பதவி பெற்று காலை வாரிவிடுபவரா நம்பிக்கைக்கு உரியவர். 3 முறை முதலமைச்சர் பதவி கொடுத்தும் திரும்பிக் கொடுத்த நம்பிக்கைக்கு உரியவர் ஓபிஎஸ். கொடுத்த பதவியை வைத்துக்கொண்டு கொடுத்தவரையே பதம் பார்ப்பவரா நம்பிக்கைக்கு உரியவர்.

 

மகாபாரதக் கதைகளை கேட்டிருப்பீர்கள். சகுனி, துரோணாச்சாரியார் என அனைவரும் கௌரவர்கள் பக்கம் தான். அவர்களை எதிர்த்த பாண்டவர்கள் 5 பேர். அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது கிருஷ்ணன். அவரும் நான் ஆயுதம் ஏந்த மாட்டேன் என சத்தியம் செய்தார். நல்லவேளை அந்த காலத்தில் உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் இல்லை. இருந்திருந்தால் அனைத்தும் கௌரவர்களுக்கு தான் சொந்தம் என சொல்லி இருப்பார்கள். அப்படி இருந்திருந்தால் பாரதமே இன்று இருக்காது. பாரதப்போர் என்றால் என்ன என்று தெரியாது. பாரதத்தில் சிறுபான்மையினர் பெரும்பான்மையினரை தோற்கடித்ததற்கு தர்மம் அவர்கள் பக்கம் இருந்தது. பெரும்பான்மையை சிறுபான்மை வெல்லும் என்பதற்கு பாரதப்போர் எடுத்துக்காட்டு” எனக் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்