துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 10 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்று சென்னை திரும்பினார். அவருடன் அவரது மகனும் தேனி தொகுதி எம்.பியுமான ரவீந்திராத் குமார், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோரும் உடன் சென்றனர். தமிழகம் வந்ததும் ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், அமெரிக்க சுற்றுப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது என்று தெரிவித்து இருந்தார். அமெரிக்காவில் இருந்து வந்த ஓபிஎஸ்ஸை வரவேற்க ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்களே அதிகமாக இருந்தனர். கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள், பொறுப்பாளர்கள் என்று யாரும் ஓபிஎஸ்ஸை வரவேற்க வரவில்லை. இதனால் ஓபிஎஸ் தரப்பு கடும் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமிக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் யாரோட ஆதரவாளர்கள் அதிகமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று போட்டி நிலவி வருவதாக கூறுகின்றனர். அமைச்சரவைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீரும் கலந்துகொண்டார். மறைமுகத் தேர்தல் பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்பட்டது. ஆனால், இதுபற்றி வெளியே யாரும் சொல்லிக்கொள்ள வேண்டாம், உரிய நேரத்தில் அரசாணை வெளியிடப்படும் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். ஆனால், எப்போது வெளியிடப்படும் என்று சொல்லவில்லை.
இந்த நிலையில்தான் அமைச்சரவைக் கூட்டத்துக்கு அடுத்த நாள் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர், 'அப்படி ஒரு திட்டம் இல்லை. இருந்தால் உங்களைக் கூப்பிட்டுதான் சொல்லுவோம்' என்று பதில் சொன்னார். ஆனால் ஓ.பன்னீர் பதில் சொன்ன சில மணித்துளிகளிலேயே மறைமுகத் தேர்தலுக்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் கடுப்பான ஓபிஎஸ் எல்லா மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களிடம் உள்ளாட்சி தேர்தலில் எனது ஆதரவாளர்களுக்கு அதிகமான இடத்தை கொடுக்க வேண்டும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த விஷயத்தை அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் எடப்பாடியிடம் தெரிவித்துள்ளதாக சொல்கின்றனர். ஆனால் எடப்பாடியோ ஓபிஎஸ் தரப்பு சொல்வதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் கட்சிக்குள் மீண்டும் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என்று உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளதாக சொல்கின்றனர்.