நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையை பெற்று திமுக ஆட்சியமைக்கவிருக்கிறது. அதேபோல், அதிமுகவும் வலிமையான எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் நுழைகிறது. இந்நிலையில், நேற்று (04.05.2021) செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.பி.உதயகுமார், “எங்களுக்கும் அறியாமல், மக்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யப்படவில்லையோ என்ற காரணத்தினால் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து அரசை வழிநடத்தக் கூடிய வாய்ப்பை மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.
ஆகவே, தலைமை தாங்கி வழிநடத்தக் கூடிய அந்த வாய்ப்பு தவறி இருந்தாலும் கூட, ஆளுகிற அரசை வழிநடத்த அதிமுகவிற்கு வாய்ப்பளித்த தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். எடப்பாடி பழனிசாமி, இந்தக் கரோனா காலத்தில் மக்களுக்கு எப்படி சேவையாற்ற வேண்டும், பாதுகாக்க வேண்டும், எவ்வாறு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பன போன்ற விஷயங்களில் நீண்ட ஆழ்ந்த அனுபவங்கள் பெற்றுள்ளார். ஆகவே மக்களைப் பாதுகாக்க வேண்டிய நேரத்தில் அவரது அனுபவத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த அனுபவங்கள் வெறும் அரசியல் அடையாளங்களாக இல்லாமல் மக்களைப் பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய பணியில் எங்களின் சார்பாக அது அளுங்கட்சியினருக்கு பங்களிப்பாக அமையும்” என கூறினார்.