சென்னையில் செய்தியாயளர்களை சந்தித்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
அப்போது, என்னைப் பொறுத்தவரை ஈரோட்டில் போட்டியிட விரும்பினேன். கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் மேலிடம் எந்த தொகுதியில் போட்டியிட சொல்கிறதோ அங்கு போட்டியிடுவேன். போட்டியிட வாய்ப்பு அளிக்காவிட்டாலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் உள்ள 40 வேட்பாளர்கள் வெற்றிபெற பாடுபடுவேன்.
பாஜக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தேசிய தலைமை வெளியிடுவதற்கு முன்பு எச்.ராஜா தன்னிச்சையாக வெளியிட்டுள்ளாரே?
எச்.ராஜாவை பொறுத்தவரை அவர் ஒரு முந்திரி கொட்டை. மேலிடம் அறிவிப்பதற்கு முன்பாகவே அவர் அறிவித்திருக்கிறார். மேலிடம் அறிவிக்கும்போது பட்டியலில் எச்.ராஜா இருக்கிறாரா? அல்லது ஆட்டுப்பட்டியிலே அடைபடப்போகிறாரா என்று பார்க்கலாம்.
அதிமுகவைப் பொறுத்தவரையில் தோல்வி பயத்தில் மிகவும் மிரண்டு போயிருக்கிறார்கள். எப்படியாவது டெபாசிட் வாங்க வேண்டும் என்பதற்காக ஆயிரம் கொடுக்கிறோம், ஆயிரத்து 500 ரூபாய் என்று சொல்லுகிறார்கள். ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால்கூட அதிமுக - பாஜக கூட்டணி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாது. இவ்வாறு கூறினார்.