அரசியலில் பெரிய அளவில் முன் அனுபவம் இல்லாத வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கும் அதிமுக வேட்பாளர் தாழை மா.சரவணன் அனுபவசாலியைப்போல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். பெண்களை கவரும் விதமாக காலில்விழுந்து வாக்குகேட்பது, வலுக்கட்டாயமாக வாக்கு சேகரிப்பது என ஈடுபட்டவருகிறார்.
வரும் மாதம் 18-ம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து, வேட்புமனுத்தாக்கல் செய்த கையோடு வாக்கு பிரச்சாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் நாகை நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளரான தாழை மா. சரவணன் திருவாரூரில் வேட்புமனு தாக்கல் செய்த கையோடு நாகை பெரிய கடைத் தெருவில் இருந்து வாக்கு சேகரிக்க துவங்கினார். வாக்கு சேகரிப்பில் டீக்கடையில் இருப்பவர்களிடமும் வரும் போகும் பெண்களின், காலில் விழுந்த படியும் வாக்குகள் சேகரித்தார். அங்குள்ள மீன் வியாபாரிகள், செருப்பு தைக்கும் தொழிலாளிகள், பல்பொருள் அங்காடி, பழ வியாபாரிகள், என பல்வேறு தரப்பினரிடம் தனக்கு ஆதரவு கோரி வாக்குகளை சேகரித்து வந்தார்.
வாக்கு சேகரிக்கும்போது கூட்டமாக இருந்த பெண்களை கண்டதும் பெண்கள் மத்தியில் பலரது காலிலும் விழுந்து தொட்டு வணங்கி ஆதரவு கோரினார். அப்போது ஒரு மூன்று பெண்கள் குழந்தைகளோடு சென்று கொண்டிருந்தனர். அவர்களை மறித்து நோட்டீஸ் கொடுத்தனர். அவர்களோ நாங்க வேறு கட்சிக்காரவுங்க, உங்களுக்கு ஓட்டு போடமாட்டோம் என முகத்தில் அடித்ததுபோல் சொல்ல, நீங்க இதுவரை எந்த கட்சியாக இருந்தால் என்னங்க இந்த முறை எங்களுக்கு ஓட்டு போடுங்க, என்று தொடரந்து மன்றாடி வாக்கு கேட்டது பலரையும் சிரிக்க வைத்தது.
அப்போது "இது அம்மாவின் கட்சி, உங்களின் சின்னம், உங்களுக்காகவே நாங்கள் இருக்கிறோம். நான் அரசியலுக்கு புதிது என்றாலும் உங்களுக்காக உழைப்பேன் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவன்” என்றெல்லாம் பல்வேறு சென்டிமென்டான செய்திகளைக் கூறி வாக்கு கேட்டார்.