தமிழக பாஜக கட்சியின் சிறுபான்மை அணி சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா சென்னை கீழ்ப்பாக்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
அப்போது பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பேசிய போது, 1940 ஆம் ஆண்டு முதல் ஏதோ ஒரு காரணத்திற்காக அரசியலில் மதம் கலந்து விட்டது. அப்போதிலிருந்து தொடர்ந்து வரும் இந்த நிலை மாற வேண்டும். மதச்சார்பின்மை என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்காக மட்டும் அந்த மதத்தின் சடங்குகளை ஏற்பது கிடையாது.
தமிழகத்தில் மதத்தை வைத்து அரசியல் நடந்து வருகிறது. அதே வேளையில் மதங்களை வைத்து அரசியல் செய்யாதவர்களை மதங்களுக்கு எதிரி என பட்டத்தை சூட்டுகின்றனர். இனி வரும் காலங்களில் இந்தியாவில் பாஜக தலைவர்கள் அனைத்து மதத்தில் இருந்தும் வருவார்கள். பாஜக ஒரு மதத்துக்கு சொந்தமான கட்சி அல்ல. அப்படி ஒரு மதத்தில் இருந்து தலைவராக வந்தாலும் மக்களிடம் அந்த மதத்தை திணிக்க போவது கிடையாது. இது தான் பாஜகவின் பலம். இதனை மக்கள் புரிந்து கொள்வதற்கு கொஞ்சம் நாட்கள் ஆகும்.
மதச்சார்பின்மை என்றால் என்ன என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். சிறுபான்மை , பெரும்பான்மை இதையெல்லாம் தாண்டி நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். திராவிட காட்சிகள் மக்களிடத்தில் பொய்யை விதைத்து வைத்து இருக்கிறார்கள். அதனை களையெடுத்து உண்மையை மக்களிடம் கொண்டு சொல்லுவதற்கு கொஞ்சம் நாட்கள் ஆகும். 2024 ஆம் ஆண்டில் மிகப்பெரிய தாக்கத்தை தமிழகத்தில் பாஜக ஏற்படுத்தும். நான் கவுன்சிலர், எம்எல்ஏ, எம்பி போன்ற பதவிகளை பார்த்தவன் இல்லை. ஆனாலும் நான் பயன்படுத்தும் சட்டை வாட்ச், கார் என அனைத்து பொருட்களும் என்ன விலை என திமுகவினர் கேட்கின்றனர். இதை நான் வரவேற்கிறேன். இது நடக்க வேண்டும் என்று தான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன்.
விரைவில் தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் நடைபயணமாக சென்று மக்களை சந்திக்க உள்ளேன். இதற்கு முன்பாக நான் ஐபிஎஸ் பணியில் சேர்ந்த நாள் முதல் தற்போது வரை உள்ள எனது முழு வாங்கி கணக்கு விவரங்களை மக்கள் அறியும் வகையில் 300 பக்க அளவில் அறிக்கையாக வெளியிடுவேன். நேர்மையான அரசியலுக்கு நான் இதை செய்வதால் மக்கள் என்னை நம்புவார்கள். தமிழகத்தில் 70 ஆண்டு காலம் ஜாதியை வைத்து தான் திராவிட அரசியல் நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும்" என்று பேசினார்.