முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளர்களையும், கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து தமிழ்நாடு முழுக்க பிரச்சாத்தில் ஈடுபட்டுள்ளார். ஒவ்வொரு நாளும் பிரச்சாரம் முடிந்து இரவு தங்கும்போது உளவுத்துறை அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக பேசுகிறார்.
குறிப்பாக இரண்டு விஷயங்களை கேட்கிறார். ஸ்டாலினை சுற்றி திமுகவில் என்ன நடக்கிறது?. ஸ்டாலின் சுற்றுப்பயணத்தின்போது மக்களுடைய ரியாக்ஷன் எப்படி உள்ளது?. அவர் பங்கேற்கும் பிரச்சாரத்தில் மக்கள் தானாக தன்னெழுச்சியாக வருகிறார்களா? அல்லது மாவட்டச் செயலாளர்களால் ஏற்பாடு செய்யப்படுகிறதா? என்று கேட்டுள்ளார்.
மேலும், அதிமுகவில் உள்ள ஒவ்வொரு அமைச்சரும் தேர்தல் பணிகளில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை ஏற்கனவே கண்காணிக்க சொல்லியிருந்தார். அதுகுறித்து விசாரிக்கும்போது, டெல்டா பகுதியைச் சேர்ந்த பல அமைச்சர்கள் தினகரன் தரப்போடு இரகசியமாக டீலிங்கில் இருக்கிறார்கள் என்பதையும், பல அமைச்சர்கள் ஒதுக்கப்பட்ட தேர்தல் நிதியை முழுமையாக கட்சியினருக்கு கொடுக்காததையும் கண்டுபிடித்து சொல்லியுள்ளனர்.
இதனால் ஓரிரு அமைச்சர்களை தவிர, மற்ற அமைச்சர்கள் மீதும் சந்தேகக் கண்ணோட்டத்திலேயே இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
ஓ.பி.எஸ். தனியாக தேர்தல் சுற்றுப்பயணம் செய்வதால் அவருடன் தனது சந்தேகங்கள் குறித்து எடப்பாடி பேச முடியாமல் இருக்கிறார். விரைவில் ஓ.பி.எஸ்.ஸுடன் சந்தித்து முக்கிய அமைச்சர்களை வைத்துக்கொண்டு ஆலோசனை நடத்துவதுடன், அப்போது எனக்கு எதிராக சிலர் செயல்படுகிறார்கள். அதற்கான ஆதாரம் இருக்கிறது. இப்படி இருந்தால் 18 தொகுதி இடைத்தேர்தலில் எப்படி அதிமுக வெற்றி பெற முடியும்? ஆட்சியை தக்க வைக்க உங்களுக்கு யாருக்கும் அக்கறை இல்லை என தனது ஆதங்கத்தை கொட்ட உள்ளாராம்.