அதிமுக, பாஜக மோதல்கள் ஒரு நாடகம். அவர்கள் பிரிவார்கள் என்ற எண்ணம் தவறானது என பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவர்கள் நடிகர்களாக இருப்பதால் வரக்கூடாது என சொல்லுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் அரசியலுக்கு முன் இருக்கும் நிலைக்கும் அரசியலில் வந்த பின் இருக்கும் நிலைக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு அரசிடம் நாங்கள் தொடர்ந்து வைக்கக்கூடிய முக்கியமான கோரிக்கை என்னவென்றால், 2007 செப்டம்பர் மாதத்தில் கலைஞர் முதல்வராக இருந்த போது த.மு.ம.க. சார்பில் நாங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 3.5% இட ஒதுக்கீடு அளித்தார். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பல்வேறு தளங்களிலும் இந்த இட ஒதுக்கீடு சரியான முறையில் கடைப்பிடிக்கப்படவில்லை. அதுகுறித்த வெள்ளை அறிக்கையை திமுக வெளியிட வேண்டும் என்பது கோரிக்கை. அந்த அறிக்கையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களின் இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும். அதிமுக, பாஜக மோதல்கள் ஒரு நாடகம். அவர்கள் பிரிவார்கள் என்ற எண்ணம் தவறானது. அவர்கள் தொடர்ந்து ஒன்று சேர்ந்துதான் பயணிப்பார்கள். பாஜகவின் கொடும்பிடியில் அதிமுக உள்ளது. அந்தப் பிடியில் இருந்து அதிமுக விலகி வர முடியாது” எனத் தெரிவித்தார்.