புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள அ.தி.மு.க.வைச் சேர்ந்த ரத்தினசபாபதிக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அறந்தாங்கி வந்த எடப்பாடி பழனிசாமியிடம் அதற்கான விளக்கம் கேட்டும் பதில் இல்லாத நிலையில், 'தனக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்பட்டது? நான் அ.ம.மு.க. போய் வந்ததால்' என்று கூட கேட்டும் பதில் சொல்லவில்லை. அதனால், நீதி கேட்டு விராலிமலை முருகன் சன்னதியில் தொடங்கி அறந்தாங்கி தொகுதி மணமேல்குடி கோடியக்கரை வரை பிரச்சாரப் பயணம் செய்ய இருப்பதாக அறிவித்தார்.
அதன் பிறகும் எந்தச் சமாதானமும் செய்யாத நிலையில் இன்று (24/03/2021) ரெத்தினசபாபதிக்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் பதவி வழங்கி அறிக்கை வந்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த ரத்தினசபாபதி, "நான் 9 வருடம் பொருளாளராகவும், 14 வருடம் அவைத்தலைவராகவும் இந்தக் கழகத்தில் பணி செய்திருக்கிறேன். இப்போதும் எனக்கு பதவி வழங்கி இருக்கிறார்கள். ஆனால் எனக்கு இந்தப் பதவியில் தொடர்ந்து பயணிக்க விருப்பம் இல்லாததால் தனது மாவட்ட அவைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.
இந்த இயக்கத்திலேயே நான் அதிகம் நேசிக்கும் நபர் செங்கோட்டையன் தான் அவர் வழிகாட்டுக்குழு போடும்போது சொன்னதை இப்போது கூறுகிறேன். இந்த வழிகாட்டுக்குழுவில் இருப்பதைவிட இல்லாமல் இருப்பதே பெருமை என்று சொன்னார். அது போல இவர்களோட பதவியில் இருந்து பயணிப்பதைவிட இல்லாமல் இருப்பதே மேல். அதனால் தான் ராஜினாமா செய்தேன். எல்லோரும் ஒன்றாகப் பயணிக்க வேண்டும் என்று நான் சொன்னதை ஏற்கவில்லை. அதனால் இயக்கம் கெட்டுப் போகுமோ என்ற பயம் எழுந்துள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் அ.ம.மு.க. 15,000, 20,000 ஓட்டுகளைப் பிரிக்க முடியும். இப்போது கூட ஒன்று சேர்ந்தால் கூட நல்லது தான்.
ஆனால், மக்கள் நலக்கூட்டணியில் இருந்தவர்கள் எல்லாம் இன்று தி.மு.க.வில் பயணிக்கிறார்கள் என்பது அந்த இயக்கத்திற்குப் பலம் தான். நிச்சயம் பணத்தால் மட்டும் சாதிக்க முடியாது. அ.தி.மு.க.- அ.ம.மு.க. வேறு வேறு கட்சிகள் இல்லை. சசிகலாவை இப்போது அழைக்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் அழைக்கும் தொனி சரியில்லை. நிபந்தனைகளைப் போட முடியாது. மீண்டும் இணைக்கும் முயற்சிகளை செய்வேன். சசிகலாவை நேரம் வரும் போது சந்திப்பேன். ஆனால் அதற்கு முன்பு அ.தி.மு.க.வில் உள்ள விஷச் செடிகளை ஒவ்வொன்றாக அகற்ற வேண்டும். அந்த வேலைகளை செய்வேன்" என்றார்.