பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக திண்டுக்கல் மாவட்டம் சென்றுள்ளார். பொதுக்கூட்டம் ஒன்றிலும் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “மாற்றுத்திறனாளி ஒருவர் கோப்பையுடன் சென்று நான்தான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எனக் கூறி முதல்வரிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டு வந்துள்ளார். இதன் பின்பே அவர் போலியானவர் என தெரிய வந்துள்ளது. முதலமைச்சர் அலுவலகத்தில் அது குறித்து சரியாக சோதனை செய்திருக்க வேண்டும். முதல்வரை பார்க்க வருவது யார் அவரது பின்னணி என்ன என்பது குறித்தெல்லாம் ஆய்வு செய்திருக்க வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தல் அறிவித்த பின் கூட்டணி குறித்து முடிவு செய்யலாம். திமுக ஆட்சிக்கு வந்ததே தமிழை வைத்தும் மொழிப்போரை வைத்தும் தான். இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தும் எங்கே தமிழ் என தேடிக்கொண்டுள்ளோம். காரணம், எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் இப்போது எங்கும் மது எதிலும் மது. அந்த சூழல் மாறிவிட்டது.
கொடநாடு கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்றால் வைக்கட்டும். நமக்கு வேண்டியது உண்மை வெளிவர வேண்டும் அவ்வளவு தான். குற்றம் செய்தது இந்த கட்சியா அந்த கட்சியா என்பது எல்லாம் எங்களுக்கு கிடையாது. உண்மைகள் அனைத்தும் மக்களுக்கு தெரியட்டும். சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றால் விசாரிக்கட்டும்” எனக் கூறினார்.