கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ளது அரியநாச்சி கிராமம். இக்கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலை சின்னக்கல்பூண்டியான் வகையறாவைச் சேர்ந்தவர்கள் காலம்காலமாக நிர்வகித்து வருகின்றனர். கோவில் கட்டடங்கள் சிதிலமடைந்து உள்ளதால் புதிதாக கோயில் கட்டுவதற்கு முடிவெடுத்தனர். அதற்கு அதே ஊரைச் சேர்ந்த கீழக்கல்பூண்டியான் வகையறா வைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இவ்விரு தரப்பினரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் தனித்தனி குழுவாகச் செயல்பட்டு வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா அந்த ஊருக்கு வந்து கோயிலுக்கு அருகிலுள்ள இடத்தில் மாரியம்மன் சிலையை வைத்து கோயில் கட்டுமானப் பணிகளை தொடங்கினார். அப் போது எதிர்த்தரப்பினர் ஆட்சேபித்ததால் உடனடியாக அங்குசென்ற காவல்துறையினர் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வரும் எனக் கூறி ஹெச்.ராஜாவை அங்கிருந்து வெளியேற நிர்ப்பந்தித்தனர். இந்நிலையில் இருதரப்பும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹெச்.ராஜாவை வரவழைத்து அவர் மூலம் கோயி லுக்கு அருகிலுள்ள மந்தைவெளியில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்போவதாக கூறி அவரை வரவேற்கும் வகையில் சின்னக்கல் பூண்டியான் வகையறா சார்பில் 31-ஆம் தேதி வேப்பூர் பகுதிகளில் சுவரொட்டி ஒட்டப்பட்டது. அதையடுத்து ஹெச்.ராஜாவின் வருகைக்கு எதிர்ப்புதெரிவித்து அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் மற்றொரு சுவரொட்டி ஒட்டப்பட்டது. கடந்த 01-ஆம் தேதி மாலை வேலூரிலிருந்து விருதுநகர் செல்லும் வழியில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்துவிட்டுப் போகலாமென வேப்பூர் வந்தார் ஹெச்.ராஜா. ஆனால் ஏற்கனவே கலவரமேகம் சூழ்ந்துள்ள நிலையில் ராஜா வருகையைத் தடுக்க 144 தடை உத்தரவைப் பிறப்பித்தது காவல்துறை.
மாலை சுமார் ஆறரை மணியளவில் வேப்பூர் வந்த ஹெச்.ராஜா தனியார் ஹோட்டலில் தங்கினார். ராஜா வந்திருப்பதை அறிந்த கீழக்கல் பூண்டியான் வகையறாவினர் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம் நடத்தினர். அவர்களை சமாதானம் செய்த காவல்துறை அதிகாரிகள் ராஜா தங்கியிருந்த ஹோட்ட லுக்கு சென்று தடையுத்தரவையும், நிலைமையையும் எடுத்துச்சொல்ல, அரியநாச்சி செல்லும் திட்டத்தை ரத்து செய்துவிட்டு சென்றுவிட்டார். ஆயிரம் பிரச்சனை, அறிக்கைப் போர் என இருந்தாலும் ஹெச்.ராஜாவை எதிர்ப்பதில் அ.தி.மு.க. -தி.மு.க. கழகங்கள் கைகளை இணைத்துக்கொண்டதை சமூக ஊடகங்கள் சுட்டிக்காட்டி வேடிக்கையான கமெண்ட்களைத் தெரிவித்திருந்தன.