
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது அதர்நத்தம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட பொருளாளராகவும் பதவி வகித்து வந்தவர் பரம செல்வம் ஆவார். இவருக்குச் சொந்தமான விளைநிலத்தில் ஷெட் அமைத்து கள்ளநோட்டு அச்சடிக்கப்பட்டு வருகிறது என ராமநத்தம் போலீசாருக்கு இன்று (31.03.2025) அதிகாலை ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 85 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதோடு அச்சடிக்கும் இயந்திரம், பணம் எண்ணும் இயந்திரம், வாக்கி டாக்கி மற்றும் ஏர்கன் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இது தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளைநிலத்தில் கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்பட்டுக் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கள்ளநோட்டு விவகாரம் தொடர்பாக விசிக மேற்கு மாவட்ட பொருளாளர் பரம செல்வம் நீக்கப்பட்டுள்ளார். மேலும் பரம செல்வத்தைக் கட்சியில் இருந்து நிரந்தரமாக விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் வீர திராவிட மணி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வரும் கடலூர் மேற்கு மாவட்டத்தின் மாவட்ட பொருளாளராகப் பணி செய்து வந்த அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பரம செல்வம் என்பவரை அவரை கட்சியின் மாவட்ட பொருளாளர் பதவியில் இருந்து விடுக்கப்படுகிறார். மேலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார். மேலும் அவருடன் கட்சியினர் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்ளப்படுகிறது. மீறுவோர் மீதும் நடவடிக்கை தொடரும் என்பதை இதன் மூலம் உறுதிப்படத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.