கடந்த ஜனவரி 26 குடியரசு தினவிழாவில் பங்கேற்க இருந்த தமிழக அரசின் அணிவகுப்பு ஊர்திகளை ஒன்றிய அரசு ஏற்க மறுத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர், 'ஒன்றிய அரசால் நிராகரிக்கப்பட்டாலும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தமிழக அரசின் அணிவகுப்பு ஊர்திகள் செல்லும்' என உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் ஒன்றிய அரசால் நிராகரிக்கப்பட்ட தமிழக ஊர்திகள் இன்று தமிழகம் முழுவதும் பயணிக்கின்றன என மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசினார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய திருச்சி சிவா ''குடியரசு நாள் அணிவகுப்பில் தமிழக ஊர்திகள் நிராகரிக்கப்பட்டது வருத்தத்தைத் தருகிறது. தமிழகத்திற்கும் தமிழுக்கும் சம உரிமை கிடைக்க செய்ய வேண்டும். தென்னிந்தியா, குறிப்பாக தமிழகம் புறக்கணிக்கப்படுவது நெடுங்காலமாகத் தொடர்கிறது'' என்றார்.