அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். தரப்பினரிடையே காரசாரமாக விவாதிக்கப்பட்டதாகவும், இதனால்தான் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக செயற்குழுக் கூட்டம் நடந்தது என்றும் கூறப்பட்டது. இதில் எந்த முடிவும் எட்டப்படாததால் கூட்டத்திற்கு பின் அக்டோபர் 7ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என்று கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் அடுத்த நாளான செப்.29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடனான முதலமைச்சர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதேபோல் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை முடிந்த பின்னர் சில மூத்த அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமியும் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிலையில் சென்னையில் தனியார் பங்களிப்புடன் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடக்க விழா இன்று காலை நடந்தது. இதற்காக தனியார் நிறுவன அழைப்பிதழில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால் அரசு சார்பில் வெளியிடப்பட்டிருந்த அழைப்பிதழில் துணை முதலமைச்சர் பெயர் இடம் பெறவில்லை.
நேற்றைய தினம் போலவே இரண்டாவது நாளாக இன்றும் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.