தி.நகர் தொகுதி எம்எல்ஏ சத்யாவை கண்டித்து அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று திடீர் போராட்டம் நடந்தது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த வி.பி.கலைராஜன் டிடிவி.தினகரன் அணிக்கு சென்றார் பின்பு திமுகவில் கலைராஜன் இணைந்தார். இதையடுத்து, அந்த பதவிக்கு தி.நகர் எம்.எல்.ஏ. சத்யா நியமிக்கப்பட்டார். இந்நிலையில், எஸ்.எம்.கே. முகமதுஅலி ஜின்னா, வழக்கறிஞர் ராஜ்குமார் உள் ளிட்டோர் தலைமையில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தை நேற்று முற்றுகையிட வந்தனர். இதனை அறிந்த போலீஸ் அதிமுக அலுவலகத்தில் குவிக்கப்பட்டனர்.

ஊர்வலமாக வந்த முன்னாள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் அதிமுக அலுவலகம் வர அனுமதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, அதிமுக அலுவலகத்தில் தலைமைக் கழக மேலாளர் மகாலிங்கத்திடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அப்போது, தி.நகர் சத்யாவால் கட்சியின் பெயருக்கு கலங்கம் ஏற்படுகிறது. கட்சிக்கு உண்மையாக உழைப்பவர்களை நீக்கி விட்டு, தனக்குத் தெரிந்தவர்கள், மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என்றும் தெரிவித்தனர். இதுதொடர்பாக தலைமை நடவடிக்கை எடுத்து, மாவட்டச் செயலாளர் சத்யாவை நீக்க வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்தினோம். தலைமைக் கழக நிர்வாகி மகாலிங்கத்திடம் புகார் மனு அளித்து, சில தகவல்களையும் தெரிவித்துள்ளோம்.

இதுதொடர்பாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்ஸிடம் புகார் அளித்துள்ளதாகவும், புகாரை விசாரிக்க ஐவர் குழு நியமித்துள்ளதாகவும், அவர்கள் வரும் 14-ம் தேதி விசாரணை நடத்துவார்கள் என்றும் மகாலிங்கம் தெரிவித்தார். இதன் அடிப் படையில் நாங்கள் கலைந்து செல்கிறோம். விரைவில் நல்ல தகவல் கிடைக்கும் என்று நம்புகிறோம். இல்லையெனில் சத்யாவை நீக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். இதனால் அதிமுகவில் மாவட்ட செயலாளரை மாற்றும் எண்ணத்தில் அதிமுக தலைமை இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.