“நாங்க டெல்லிய நம்பர் 1 ஆக்கிட்டோம். அடுத்து 2024ல் இந்தியாவை நம்பர் 1 ஆக்குவோம்" என பாதயாத்திரை நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி மாநிலத் தலைவர் பேசியது மக்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்திய நாட்டின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் ‘மேக் இன் இந்தியா நம்பர் 1' என்ற பிரச்சார இயக்கத்தை டெல்லி மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி வைத்து இந்த இயக்கத்தில் நாட்டின் குடிமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.
மேலும், சுகாதாரம், கல்வி, விவசாயம் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் நிலையான கவனத்தை செலுத்தினால் இந்தியாவை மீண்டும் நம்பர் 1 ஆக்கலாம் எனத் தெரிவித்தார். அதே சமயம், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை காட்டமாக விமர்சிக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், நாட்டின் வளர்ச்சிக்காக நாம் இந்த அரசியல் தலைவர்களை நம்பி இருக்க முடியாது. அப்படி செய்வது நமக்கும், நாட்டுக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் எனப் பேசினார்.
இந்நிலையில், கெஜ்ரிவாலின் கனவு திட்டமான ‘மேக் இன் இந்தியா நம்பர் 1’ குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி சார்பில் திருச்சியில் இருந்து கன்னியாகுமரி வரை பாதயாத்திரை நடத்தப்படுகிறது. மேலும், அக்கட்சியின் மாநிலத் தலைவர் வசீகரன் தலைமையில் மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு இந்த பாதயாத்திரையின் தொடக்கவிழா நடைபெற்றது.
இது குறித்து ஆம் ஆத்மி மாநிலத் தலைவர் வசீகரன் பேசும்போது, “நம்ம நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்சி 75 வருஷம் ஆகுது.. ஆனா, இப்ப வரைக்கும் 66 சதவீத மக்களுக்கு தரமான கல்வி கிடைக்கல. அரசு மருத்துவமனையில சுகாதார வசதிகள சரியா கட்டமைக்கல. இதையெல்லாம் மாற்றுவதற்கு ஒரே வழி மேக் இந்தியா நம்பர் 1 திட்டம் தான். இதை வெச்சி நாங்க டெல்லிய நம்பர் 1 ஆக்கிட்டோம். நெக்ஸ்ட் பஞ்சாப நம்பர் 1 ஆக்கப்போறோம். அதே மாதிரி 2024ல் இந்தியாவை நம்பர் 1 ஆக்குவோம்” எனப் பேசியிருந்தார்.
- சிவாஜி