அரியலூர் மாவட்டம் திருமானூரில் ஜி.கே.மூப்பனார் பெயரை அழித்ததாக தி.மு.க.வினருக்கு எதிராக ஆர்ப்பரிக்கிறார்கள் த.மா.கா.வினர். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள த.மா.கா.இளைஞரணி தலைவர் யுவராஜா நம்மிடம், "அய்யா மூப்பனார் அவர்களின் பாராளுமன்ற நிதியில் திருமானூரில் அரங்க மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த மேடையை, பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கிராம பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டது. மேலும், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார பரப்புரைக்கு இந்த இடத்தைத்தான் பயன்படுத்த வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், இன்று (24.12.2020) அத்தகைய அரங்க மேடையை, உதயநிதி வருகிறார் என்கிற காரணத்திற்காக அவசர அவசரமாக மூப்பனார் பெயரை அழித்திருக்கிறார்கள். ஏதோ யூனியன் சேர்மன் நிதியில் வேலை பார்த்து கட்டியது போல அரங்க மேடையின் பெயரான ‘ஐயா ஜி.கே. மூப்பனார் அரங்கம்’ என்ற பெயரை அழித்திருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம்.
ஆட்சிக்கு வருமுன்பே அராஜக செயலில் ஈடுபடும் தி.மு.க வை வன்மையாக கண்டித்து, தி.மு.க. இளைஞரணி தலைவர் உதயநிதி வாகனத்தை த.மா.கா மாணவரணி மாநில துணைத்தலைவர் மனோஜ் மற்றும் ஜோதிமணி ஆகியோர் தலைமையில் த.மா.கா வினர் மறித்து தங்களின் எதிர்ப்பை காட்டியுள்ளனர். பொதுமக்களும் தி.மு.க.வின் இந்த அராஜகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுபோன்ற அராஜக செயலில் ஈடுபடும் தி.மு.க.வை த.மா.கா இளைஞரணி சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்” என்றார் எம்.யுவராஜா.