'தமிழீழ அரசியல் என்பது வேறு; தமிழ்நாட்டு அரசியல் என்பது வேறு. இரண்டையும் இணைத்துப் பேசுவதே பொருத்தம் இல்லாதது' என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''சீமான் பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பெரியார் பற்றி பேசுகிறார். அவர் பேச்சு காலப்போர்த்தம் இல்லாதது, கருத்தியல் பொருத்தம் இல்லாதது. கவன ஈர்ப்புக்காக, பரபரப்புக்காக, தன்னை நம்பி வரும் இளைஞர்களின் உணர்ச்சிகளை தன்னுடைய அரசியல் பயணத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற ஒற்றை நோக்கில் அவர் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார். அவர் அதைக் கைவிட வேண்டும்.
பெரியாருடைய வெங்காயம்தான், காங்கிரஸ் ஆட்சியை இந்த மண்ணில் வீழ்த்தியது. அந்த வெங்காயம்தான் 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் சனாதன சக்திகள் வேரூன்ற விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. பெரியாருடைய அந்த வெங்காயம்தான் இன்றைக்கும் சனாதன சக்திகளை தமிழ்நாட்டிற்குள் நுழைவிடாமல் விரட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை அவரைப் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்'' என்றார்.
சீமான்-பிரபாகரன் சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், ''அதுகுறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அது விவாதிக்கப்பட வேண்டிய முக்கியமான பிரச்சனையும் இல்லை. தமிழ்நாட்டில் பேசப்பட வேண்டிய நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. சிறுபான்மை மக்களை தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற பாஜக அரசு பற்றி அவர் பேசவில்லை. ஆணவக் கொலைகளை பற்றி பேசவில்லை. தலித் மக்களுக்கு எதிரான படுகொலைகளை பற்றிப் பேசவில்லை. பேசப்பட வேண்டிய பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கிறது. தமிழீழ அரசியல் என்பது வேறு; தமிழ்நாட்டு அரசியல் என்பது வேறு. தமிழீழம் என்பது விடுதலை தொடர்பான அரசியல். தமிழ்நாட்டில் நிலவுவது உரிமை தொடர்பான அரசியல். தமிழீழ விடுதலை அரசியலையும் தமிழ்நாட்டு உரிமை அரசியலையும் இணைத்து பேசுவது என்பதே பொருத்தம் இல்லாதது'' என்றார்.