
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான கருத்து வேறுபாடுகளுக்குப் பின்னர் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தன்னை நிலை நிறுத்த முயற்சி செய்துவருகிறார். அதேநேரம் எடப்பாடி பழனிசாமியை ஓபிஎஸ் மற்றும் அவரது அணியினர் கடுமையாக எதிர்த்துவருகின்றனர்.
தற்பொழுது இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி உள்ள நிலையில் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக வெளியிட்டிருந்த அந்த அறிவிப்பில் ‘அதிமுகவின் சட்டதிட்ட விதியின் அடிப்படையில் உறுப்பினர்களால் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். வேட்புமனு மார்ச் 18 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனு பரிசீலனை 20 ஆம் தேதி. வேட்பு மனுவை திரும்பப் பெற 21ம் தேதி கடைசி நாள். மார்ச் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு, மறுநாள் 27 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும். அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி விருப்ப மனுவைப் பெற்றுக் கொள்ளலாம்' என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த 18ம் தேதி வேட்பு மனுத் தாக்கலுக்கான முதல் நாளே இ.பி.எஸ். தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அவரது அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து ஓ.பி.எஸ். அணியினர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கவேண்டும் என வழக்கு தொடர்ந்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கலுக்கான கால அவகாசம் இன்று (19ம் தேதி) மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. இதில், இ.பி.எஸ்.சை தவிர யாரும் மனுத் தாக்கல் செய்யாததால் அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருக்கிறது.
அதேசமயம், ஓ.பி.எஸ். தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு இன்று அவசர வழக்காக விசாரிக்கப்படு நீதிபதி குமரேஷ் பாபு, ‘தேர்தல் நடைமுறைகள் மேற்கொள்ளலாம். ஆனால், தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது’என்று உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பான வழக்கை வரும் 22ம் தேதி விசாரித்து 24ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
கட்சியில் தற்போது இ.பி.எஸ். அன்னபோஸ்டாக வெற்றி பெறும் நிலையில் இருக்கிறார். அதேசமயம், 24ம் தேதி நீதிமன்றத்தின் தீர்ப்பில் தான் அவரது வெற்றி உறுதி செய்யப்படும்.