Skip to main content

“முதல்வரை வேலை வாங்குவது ஆளுநரின் கடமை” - அண்ணாமலை

Published on 12/01/2023 | Edited on 12/01/2023

 

bjp annamalai talk about cm stalin and governor rn ravi

 

திண்டுக்கல்லில் பாரதிய ஜனதா கட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாநில செயற்குழு கூட்டம் மற்றும் பயிற்சி முகாம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து  ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்காகப் பிரதமர் மோடி போராடி வருகிறார். ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்று பாரதிய ஜனதா கட்சிக்கு நம்பிக்கை உள்ளது. தமிழகம், தமிழ்நாடு இரண்டும் ஒன்றுதான். முதல்வர் ஸ்டாலின்  பலமுறை தமிழகம் என்று பேசியிருக்கிறார். ஆளுநர் தமிழகம் என்று குறிப்பிட்டது ஒன்றும் தவறில்லை. அரசியலுக்காக திமுக இதைப் பெரிதுபடுத்துகிறது. ஆளுநர் தமிழக கலாச்சாரத்தை முழுவதுமாக உணர்ந்தவர். ஆளுநர் உரை கூட தமிழில்தான் அவர் பேசியிருக்கிறார். தமிழர் கலாச்சாரத்தை ஒருபோதும் பாரதிய ஜனதா விட்டுக் கொடுக்காது. ஆளுநர் அறிக்கையில் தமிழகம் அமைதி பூங்கா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது பொய் இப்போதுதான் கோவையில் குண்டு வெடித்துள்ளது. தமிழகம் அமைதி பூங்கா அல்ல. திமுக கொடுக்கக்கூடிய அறிக்கையை அப்படியே ஆளுநர் படிக்கக்கூடாது.

 

தமிழக அரசுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால் உண்மையான தகவல்தான் கொடுக்கிறோமா என்று பார்த்து ஆளுநரிடம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். பல இடங்களில் மத்திய அரசு, மாநில அரசு சுமுகமாகச் செயல்படுகின்றன. அதிகாரிகளைப் பொறுத்தமட்டில் மத்திய அரசும் வேண்டும், மாநில அரசும் வேண்டும். வண்டியில் இரு சக்கரம் போன்றது மத்திய அரசும் மாநில அரசும். இரண்டும் ஒரே வேகத்தில் செல்ல வேண்டும். ஒன்றிய அரசு என்பது தவறான கருத்தாகும். திமுக பயன்படுத்தக்கூடிய ஒன்றிய அரசு என்பது தவறான வார்த்தை. 5 முறை முதல்வராக இருந்த கலைஞர் கூட அப்படிக் கூறவில்லை 12 பல்கலைக்கழகங்களில் முதலமைச்சரை வேந்தராக அறிவிக்கும் சட்ட வடிவை ஆளுநர் நிறுத்தி வைத்தார். யுஜிசி விதி 156 படி வரம்பு மீறியதாகும். இதனால்தான் ஆளுநருக்கு முதல்வருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. கவர்னருக்கும் திமுகவிற்கும் இடையிலான முதல் பிரச்சனை நாங்கள் கொடுத்த  பில்லில் கவர்னர் கையெழுத்து போடவில்லை என்பது திமுகவின் குற்றச்சாட்டு. 2021-ல் கவர்னருக்கு வந்த அனைத்து பில்லிலும் கவர்னர் கையெழுத்திட்டார். 2022 ல் 15 பில்லில் கையெழுத்து போடாமல் வைத்திருந்தார். அதில் 12 பில் தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சர் வேந்தராக நியமிக்க வேண்டும் என்பது. அதில் கவர்னர் கையெழுத்து போடவில்லை காரணம் அது 1956 ஆம் ஆண்டிற்கான யுஜிசி சட்டத்திற்கு எதிராகும். கவர்னர் கையெழுத்து போட்டாலும் அது கோர்ட்டில் தடை ஆகும்.  இது மாநில அரசின்  வரம்பில் இல்லை என அவர் கையெழுத்திடவில்லை. கேரளா மற்றும்  மேற்கு வங்கம் மாநில ஆளுநர்களும் கையெழுத்து போடவில்லை தற்பொழுது கவர்னரே வேந்தராக உள்ளார்.

 

மற்றொரு பில் கோ ஆப்பரேட்டிவ் சொசைட்டி நிர்வாகத்தை கலைக்கக்கூடிய அதிகாரத்தை அதிகாரிகளுக்கு கொடுக்கக்கூடிய பில். அதில் கவர்னர் கையெழுத்து இடவில்லை. இவ்வளவு காலமாக அதில் உள்ள சிஸ்டம் நடைமுறை என்னவென்றால் ஏதேனும் அதில் பிரச்சனை இருந்தால் ஒரு அதிகாரியை நியமித்து அவர் விசாரணை செய்வார். அதன் பின்பு அந்த உறுப்பினருக்கோ, தலைவருக்கோ நோட்டீஸ் அனுப்பப்படும். அதற்கு அவர் விளக்கம் சொல்வார். அதன் பின்பே கலைக்கப்படும். ஆனால் திமுக கொண்டு வந்துள்ள அந்த புது பில் மாநில அதிகாரியே நேரடியாக அவரை  பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதே. இதன் மூலம் 40,000 பேரையுமே டிஸ்மிஸ் செய்ய வைத்து மீண்டும் தேர்தல் நடத்தி திமுகவினரை உட்கார வைக்க வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம் . இது ஜனநாயகத்திற்கு எதிரானது. பிஜேபியை பொறுத்தவரை ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும். தமிழக அரசு ஆளுநரிடம் அளித்த 59 சட்ட வடிவில் 15 சட்ட வடிவு மட்டுமே இதுவரை கையெழுத்து இடவில்லை மற்ற அனைத்து சட்ட வடிவமும் கையெழுத்து இடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பத்து ஆண்டு காலம் திமுக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் பல வாக்குறுதிகளை அள்ளி வீசினார். பல இடங்களில் நடக்க முடியாது எனத் தெரிந்தும் வாக்குறுதி அளித்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால் அதனை தற்போது நிறைவேற்ற மறுத்து வருகிறார். இதன் காரணமாக அரசு ஊழியர்கள் செவிலியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை செயல்படுத்தவே முடியாது என்பது திட்டவட்டம். நிதி அமைச்சர் சொல்லிட்டாரு பழைய ஓய்வூதிய திட்டம் வரப் போவதில்லை. அதுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டார்கள். 

 

அதே நேரம் புதிய பென்ஷன் திட்டத்தை சரியாக செயல்படுத்தப்படும். தமிழக முதலமைச்சர் பெருந்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன். பழனியில் முருகன் கோவிலில் குடமுழுக்கு தமிழில்தான் நடத்த வேண்டும் என்று சொன்னது பாஜகதான். ஆளுநரை தமிழக மக்களுக்கு எதிரி என சித்தரிக்கக் கூடாது. ராஜ்பவனில் ஆளுநர் பொங்கல் கொண்டாடுவதில் பெருமைப்படுகிறேன். ஆளுநரை வேலை வாங்க வேண்டியது முதல்வரின் கடமை. அதே போல் முதல்வரை வேலை வாங்குவது ஆளுநரின் கடமை. ஆளுநரிடம் தமிழக அரசு சண்டை போடுவது நியாயமா? இதனால் பாதிக்கப்படுவது சமானிய மக்கள் தான். 

 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் உள்ளது. இந்திய வரலாற்றிலேயே ஒரு அரசியல் கட்சி தலைவர் கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்த ஒரே டிஜிபி நம் தமிழக டிஜிபி. அந்த பதிலும் தவறாக உள்ளது. தினமும் தமிழகத்தில் பதற வைக்கக்கூடிய அளவிற்கு கூட்டு  பாலியல், சங்கிலி பறிப்பு உள்ளிட்ட ஏதாவது ஒரு சம்பவம் நடைபெறுகிறது.  காவல் நிலையங்களில் திமுகவினரின் கட்டுப்பாட்டை முதலமைச்சர் குறைக்க வேண்டும். இந்தியாவில் சட்டம் ஒழுங்கில் மோசமான செயல்பாடு தமிழகமே. நடிகர் அஜித்துடைய உழைப்பு அசாத்தியமானது. அதேபோல் நடிகர் விஜய் தமது நடிப்பை முதல் படத்திலிருந்து தற்போதைய படம் வரை மிகச் சிறப்பாக மெருகேற்றி உள்ளார். வாரிசு அரசியலை நாங்கள் எதிர்க்கிறோம். 

 

அரசியலில் துணிவாக இருப்பேன், வாரிசு அரசியலை எதிர்க்கிறேன் நேரம் கிடைக்கும்போது சென்று வாரிசையும், துணிவையும் பார்ப்பேன். அஜித்தும் விஜய்யும் ஜென்டில்மேன் ஆக நடந்து கொள்கின்றனர். அந்த அளவுக்கு அவர்களுடைய ரசிகர்களும் ஜென்டில்மேனாக நடந்து கொள்ள வேண்டும்” என்று  கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்