Skip to main content

உடனடியாக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்... -எம்.பி. ஜோதிமணி வலியுறுத்தல்

Published on 10/10/2020 | Edited on 10/10/2020
congress mp jothimani

 

 

வேடசந்தூர், வடமதுரையை அடுத்துள்ள குறும்பபட்டியை சேர்ந்த 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து, படுகொலை செய்த சம்பவத்தில் குற்றவாளி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும், தமிழக அரசு பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், குடும்பத்திற்கும் நீதி கிடைக்கும் வகையில் உயர் நீதிமன்றத்தில் உடனடியாக மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக முதலமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ''எனது கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி, வடமதுரையை அடுத்துள்ள குறும்பபட்டியை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளியான வெங்கடாசலம், லட்சுமி தம்பதியினரின் 12 வயது மகள் கடந்த வருடம் 16.04.19 அன்று பெற்றோர் வேலைக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் தனியாக இருந்துள்ளார். 

 

இச்சிறுமியை  கிருபானந்தன் (வயது 19) பாலியல் பலாத்காரம் செய்து, படுகொலை செய்ததாக வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருபானந்தனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

 

இந்நிலையில் குற்றவாளி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தனது குழந்தையை கொடூரத்திற்கு பலிகொடுத்த பெற்றோர்களின் வலியை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. அவர்கள் நீதிகேட்டு போராடி வருகின்றனர். 

 

ஒரு பெண்ணாக, நாடாளுமன்ற உறுப்பினராக இக்கொடூர சம்பவம் எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சிறுமி மற்றும் அவர் குடும்பத்தின் சார்பாக நீதி கேட்க வேண்டிய பொறுப்பும், கடைமையும் நம் அனைவருக்கும் உள்ளது.  

 

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், வன்முறைகள் அதிகரித்து வருவது பெண்கள் மற்றும் பெற்றோர்களிடையே ஒரு பாதுகாப்பற்ற தன்மையை, பதற்றத்தை  உருவாக்கியுள்ளது. சிறுமிகளை, பெண்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.

 

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக தமிழகமெங்கும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடை அடைப்பில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் எளியவர்கள் என்பதால் அவர்களுக்கு நீதி மறுக்கப்படக்கூடாது. 

 

ஆகவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், குடும்பத்திற்கும் நீதி கிடைக்கும் வகையில் உயர் நீதிமன்றத்தில் உடனடியாக மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

jothimani

 

மேலும், தமிழகத்தையே அதிர்ச்சியில் உறையவைத்த, பொள்ளாச்சியில் பெண்கள் ஆபாச வீடியோ எடுக்கப்பட்டு, மிரட்டப்பட்டு, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட கொடூரமான குற்றத்திற்கு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை. 

 

அரசு பாதிக்கப்பட்ட பெண்களை காப்பாற்றாமல், குற்றவாளிகள் பக்கம் வெளிப்படையாகவே நின்றது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஏற்படுத்தப்பட்ட நிர்பயா நிதி தமிழகத்தில் முறையாக பயன்படுத்தப்படாமல் உள்ளது.  

 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாக்குறுதியான பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட குற்றங்களை விசாரிக்கும் விரைவு நீதிமன்றங்கள் இன்னும் அமைக்கப்படவில்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.  

 

தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், தமிழக அரசு பெண்கள் பாதுகாப்புபற்றி அக்கறைகொள்ளாமல் அமைதிகாத்து வருகிறது. இது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல. 

 

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், வன்முறைகள் எங்கு நடந்தாலும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்