Skip to main content

“மக்களின் உயிரோடு அரசு விளையாடி வருகிறது” - இபிஎஸ் கண்டனம்!

Published on 05/12/2024 | Edited on 05/12/2024
EPS condemned for chennai sewage drinking water issue

சென்னை பல்லாவரம் அருகே மலைமேடு பகுதியில் வசித்துக் கொண்டிருக்கும் மக்கள் நேற்று (04-12-24) தண்ணீர் அருந்தியதாகச் சொல்லப்படுகிறது. அதன் பிறகு அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைசுற்றல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்டோர், தனியார் மருத்துவமனையில் 6க்கும் மேற்பட்டோர் என மொத்தம் 32 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

குடிநீரில் கழிவுநீர் கலந்திருந்ததாகவும், அந்த தண்ணீரைப் பருகியதால் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இதில் திருவேதி என்பவர் நேற்று இரவு உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மோகன்ராஜ் என்பவர் உயிரிழந்துள்ளார். குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்ததால், அவர்களது உறவினர்கள் மருத்துவமனையில் கூடி குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், மாநகராட்சி அதிகாரிகள் மாதிரி நீரைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘தாம்பரம் மாநகராட்சி 13-வது வார்டில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதில் 3 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. குடிநீர் என்பது மிக அடிப்படையான ஒன்று; அதனை மிகுந்த கவனத்துடன் விநியோகிக்க வேண்டியது அரசின் கடமை. புயல் கரையைக் கடந்ததும், குடிநீர், கழிவுநீர் குழாய்கள் இடையே எவ்வித கலப்பும் இன்றி முறையாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறதா? என்பதை அரசு உறுதிசெய்திருக்க வேண்டும்.

மெத்தனப் போக்குடன் அதை செய்யாமல் விடுத்து, சுகாதாரமற்ற குடிநீரால் மக்கள் உயிரோடு விளையாடியிருக்கும் மு.க.ஸ்டாலினின் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உயிரிழந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளோருக்கு தக்க சிகிச்சை வழங்கி, அவர்கள் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்புவதை உறுதிசெய்து, தமிழ்நாடு முழுவதும் உடனடியாக சீரான, சுகாதாரமான குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்