தமிழ்நாடு சட்டமன்றம் இன்று கூடியது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவிரி விவகாரத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைக் கர்நாடக அரசு நிறைவேற்ற உத்தரவிடக் கோரி, தமிழக அரசு சார்பில் தனித் தீர்மானம் கொண்டுவந்து, அது இன்று நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “கணவரிடம் விவாகரத்து பெற்ற பிறகும், மனைவி மனதின் ஓரத்தில் கணவர் மீது கொஞ்சம் பாசம் இருக்கத்தானே செய்யும் எனச் சொல்வது வாடிக்கை. அதுபோல், பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியே வந்து அதிமுக விலகினாலும், தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்யும், வஞ்சனை செய்யும் பா.ஜ.க.வை பாதுகாக்கும் எண்ணத்தை எடப்பாடி பழனிசாமி இன்று வெளிப்படுத்தியது அபத்தமாக உள்ளது.
காவிரியில் நீரைத் திறந்துவிடக் கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி கர்நாடகா நீரைத் திறந்துவிடுகிறதா என்பதைக் கண்காணிக்க ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் காவிரி ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
காவிரி விவகாரத்தில் கர்நாடகா - தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்கள் நேரடியாக மோதிக்கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் ஒன்றிய அரசின் கீழ், ஆணையமும் குழுவும் இயங்குகிறது என்பதை எடப்பாடி பழனிசாமி உணரவில்லையா? அல்லது உணர்ந்தும் தீர்மானத்தில் ஒன்றிய பா.ஜ.க.வை மட்டும் குறிப்பிட்டிருப்பதை மனம் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறாரா என்பது தான் எங்களின் கேள்வி. இந்நிலையில், தீர்மானத்தில் திருத்தம் கேட்பது என்பது அபத்தமானது.
காவிரி விவகாரத்தில் ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாடு அரசு உரிய அழுத்தம் கொடுக்கவில்லை என்றும், திமுக அரசுக்குத் துணிச்சல் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கூறியிருக்கிறார். துணிச்சல் மிகுந்த எடப்பாடி பழனிசாமி, துணிச்சலுக்கு பேர் போன நமது முதல்வரைப் பார்த்து இதனைச் சொல்லியுள்ளார்.
உரிய அழுத்தம் கொடுக்கவில்லை என்று அவர் சொல்வதிலிருந்து தற்போது ஏற்பட்டுள்ள காவிரி பிரச்சனையைத் தீர்த்து கர்நாடகா அரசைத் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிடவைக்க வேண்டிய முழு பொறுப்பு ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குத்தான் உள்ளது எனும் உண்மையை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
பா.ஜ.க. அரசைக் கண்டித்து, ஒன்றிய அரசு கண்டிப்பாகச் செய்யவேண்டும் எனச் சட்டமன்றத்தில் கூறி இன்று எடப்பாடி பழனிசாமி அவரது துணிச்சலை வெளிப்படுத்தியிருக்கலாம்.
ஒன்றிய பா.ஜ.க. அரசு இரு மாநிலங்களுக்கிடையே இன மோதலை தூண்டிவிடுகிறது. தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைக்கிறது. துணை ராணுவத்தை அனுப்பி தண்ணீரை பெற்று தரவேண்டும் எனச் சட்டமன்றத்தில் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ஒன்றிய அரசைக் கண்டித்து ஒரு சிறிய வார்த்தையைக் கூட பேசவில்லை.
காவிரி விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவே முதல்வர் இன்று தனித் தீர்மானம் கொண்டுவந்தார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நீரைத் தமிழ்நாட்டிற்கு திறந்துவிடக் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தித்தான் இன்று தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தில் என்ன இருக்கிறது என்பதைக் கூட முழுமையாகப் படிக்காமல், ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு முட்டுக்கொடுக்கும் விதத்தில் உளறிக் கொட்டி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இன்றைய தீர்மானம் சட்டமன்றத்தில் இரு கட்சிகளுக்குத் தான் எரிச்சலைக் கொடுத்துள்ளது. ஒன்று அதிமுக மற்றொன்று பா.ஜ.க.
கடந்த ஜூலை மாதம் கர்நாடகா மாநிலம் பெங்களூரூவில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் கர்நாடகா மாநில முதல்வர் சித்தரமையாவிடம் ஏன் காவிரி விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதுபோன்று பேச்சுவார்த்தை நடத்துவது, காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமை மறுப்பதற்குக் கர்நாடகா அரசு விரிக்கும் வலையில் நாம் விழுவதற்குச் சமமானது.
கர்நாடகா காங்கிரஸ் அரசு காவிரி நீரைத் திறந்துவிட்டால் தான் இந்தியா கூட்டணியில் சேர்வோம் என திமுக நிபந்தனை விதிக்காதது ஏன் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். பெங்களூரூவில் ஜுலை 18ம் தேதி இந்தியா கூட்டணி கூட்டம் நடைபெற்ற அதே தினத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டம் டெல்லியில் கூட்டப்பட்டது. அதில், பா.ஜ.க.வுக்கு அடுத்த பெரிய கட்சியாக இருந்தது அ.தி.மு.க. மற்ற பல கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள்கூட இல்லை. அப்போது, இந்தச் சந்தர்ப்பத்தை எடப்பாடி பழனிசாமி பயன்படுத்திக்கொண்டு, காவிரியிலிருந்து உரிய நீரைக் கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட்டால் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் பங்கேற்போம் என நிபந்தனை விதித்திருக்கலாமே” எனப் பேசினார்.