Skip to main content

திமுக தேர்தல் பணிக்குழுக்கள்; அதிருப்தியில் கொங்கு மண்டலம்!

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
Election Working Committees of DMK Kongu region in discontent

நாடாளுமன்ற தேர்தல் பணிகளை அதிகாரப்பூர்வமாக துவங்கியிருக்கும் திமுக தலைமை, இதற்காக, மூன்று முக்கிய குழுக்களை அமைத்திருக்கிறது. இந்த குழுக்கள் குறித்து கொங்கு மண்டல திமுகவினரிடம் அதிருப்திகள் வெடித்தபடி இருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு, தேர்தல் அறிக்கைத் தயாரிப்புக் குழு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தைக் குழு ஆகிய மூன்று குழுக்களை திமுக தலைவர் ஸ்டாலினும், பொதுச்செயலாளர் துரைமுருகனும் நியமித்திருக்கிறார்கள். இந்த குழுவில், கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழு குறித்துத்தான் தற்போது கொங்குமண்டல திமுகவில் அதிருப்திகள் உருவாகியுள்ளது. இது குறித்து நாம் விசாரித்தபோது, “நாடாளுமன்ற தேர்தல் பணிகளை முன்னெடுப்படுதற்காக நியமிக்கப்பட்டுள்ள இந்த குழுக்களில், பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மை சமூகமான கொங்கு வேளாளர் சமூகத்தினர் ஒருவருக்கும் இந்த குழுவில் வாய்ப்புத் தரப்படவில்லை. இந்த பாராபட்சம், திமுகவில் உள்ள கொங்கு வேளாளர் சமூகத்தினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கனவே, திமுகவின் தலைமை அமைப்பில் கொங்கு வேளாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. அதாவது, கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதை அடுத்து அந்த பதவியில் கொங்கு வேளாளர் ஒருவருக்கு வாய்ப்புத் தரப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், கொடுக்கப்படவில்லை. இப்போது தேர்தலுக்காக அமைக்கப்பட்ட 3 முக்கிய குழுவிலும் கொங்கு வேளாளர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை எங்கள் சமூக மக்களால் ஜீரணிக்க முடியவில்லை. திமுகவின் எதிர்க்கட்சிகளான அதிமுகவின் பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியும், பாஜகவின் தமிழக தலைவராக இருக்கும் அண்ணாமலையும் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தங்கள் கட்சியின் வெற்றிக்காக கொங்கு வேளாளர்களிடம் உரிமையாக அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில், திமுகவில் உள்ள எங்கள் சமூகத்தினருக்கு முக்கிய பொறுப்புகளில் வாய்ப்பளிக்கப்பட்டால்தானே கொங்கு மண்டலத்தில் உள்ள திமுகவினர் எம் மக்களிடம் உரிமையாக அணுகி அரசியல் பேச முடியும். திமுகவின் வெற்றிக்காக உழைக்க முடியும். ஆனால், எங்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகிறபோது எப்படி மக்களை நெருங்கி பேச முடியும். அதனால், கொங்கு மண்டல திமுகவின் அதிருப்திகளை கட்சி தலைமை உணரவேண்டும்” என்று தங்களின் அதிருப்திகளையும் ஆதங்கங்களையும் குமுறல்களாக வெடிக்கின்றனர் கொங்கு மண்டல திமுகவினர். 

சார்ந்த செய்திகள்