மத்தியப் பிரதேச மாநிலத்தில் அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்ந்துள்ளது.
தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 7 ஆம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. அதேபோல், மிசோரம் மாநிலத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
230 சட்டப் பேரவை தொகுதிகளை கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்தில் நவம்பர் 17 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸும், பா.ஜ.க.வும் மும்முரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், பாஜக சார்பில் பிரதமர் மோடி, அமித் ஷா, காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்துடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று (15.11.2023) மாலையுடன் முடிவடைந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.