தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (30/03/2021) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய மு.க.ஸ்டாலின், "தமிழகத்திற்கு வந்த பிரதமர் வழக்கம்போல் பொய் பேசிச் சென்றுள்ளார். என்ன பொய் பேசினாலும் மோடி மஸ்தான் வேலை தமிழகத்தில் எடுபடாது. சட்டப்பேரவையில் ஜெ'வை தி.மு.க. அவமானப்படுத்தியதாக பிரதமர் மோடி பொய் சொல்லியுள்ளார். உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் பேசும் முன்பு ஆராய்ந்து பேச வேண்டும். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.-ஸை அருகில் வைத்துக் கொண்டு ஊழலை ஒழிப்போம் என்கிறார் பிரதமர் மோடி. ஆளும் கட்சியினரின் ஊழல் பற்றி ஆளுநரிடம் பட்டியல் தந்துள்ளோம், அதை வாங்கி பிரதமர் படிக்க வேண்டும். டெல்லியில் தொடர்ந்து போராடிவரும் விவசாயிகளை அழைத்துப் பேசினாரா மோடி? நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சீட் வாங்க முடிந்ததா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதைத் தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், "தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் சீர்மரபினர் இரட்டைச் சான்றிதழ் ரத்து செய்யப்படும். சீர்மரபினர் பழங்குடியினர் என்ற ஒற்றை அரசாணை வெளியிடப்படும். நான் என்ன சொன்னாலும் அதை அடுத்த நாளே செய்து விடுகிறார் முதல்வர் பழனிசாமி" என்றார்.