வரும் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடவுள்ள நிலையில், அதிமுக வட்டாரத்தில் ஒற்றைத்தலைமை கோரிக்கை வலுத்துவருகிறது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வரும் நிலையில், பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில், இக்கடிதம் குறித்து விளக்கமளிக்க ஓபிஎஸ்ஸின் ஆதரவாளரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது மாவட்டச் செயலாளர்களின் போதிய ஆதரவு இல்லாத காரணத்தால் பொதுக்குழுவை ஒத்திவைக்க கோருகிறீர்களா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த வைத்திலிங்கம், “ஓபிஎஸ் அண்ணனுக்கு 15 மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், 15 பேர் நாங்கள் நடுநிலை வகிக்கிறோம் என்று தொலைபேசி வாயிலாக தெரிவித்திருக்கிறார்கள். எங்களுக்கு 30 மாவட்டச் செயலாளர்கள் ஆதரவும் தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவும் உள்ளது. இங்கு அமர்ந்திருக்கும் நாங்கள் அனைவரும் மாவட்டச் செயலாளர்கள்தான். நாளை எத்தனை மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் வருகிறார்கள் என்று பாருங்கள்” எனத் தெரிவித்தார்.
ஓபிஎஸ்ஸிற்கு 10க்கும் குறைவான மாவட்டச் செயலாளர்களின் ஆதரவே இருப்பதாக எடப்பாடி பழனிசாமி ஆதரவு வட்டாரத்தினர் தெரிவித்து வந்த நிலையில், தங்களுக்கு 30 மாவட்டச் செயலாளர்களின் ஆதரவு இருப்பதாக வைத்திலிங்கம் தெரிவித்திருப்பது எடப்பாடி ஆதரவு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.