நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் காய்கறி சந்தையில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருவண்ணாமலை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் கலியபெருமாளை ஆதரித்து காய்கறி மற்றும் டீக்கடை வியாபாரிகளிடமும் , பொதுமக்களிடமும் துண்டு பிரசுரங்கள் வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது காய்கறி வியாபாரிகளிடம் விளைச்சல் குறித்தும் வியாபாரம் குறித்தும் லாபம் எந்த அளவிற்கு ஈட்டுகின்றது என்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமி வியாபாரிகளிடம் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து அங்குள்ள டீக்கடை ஒன்றில் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்த அவர் கேஸ் விலை குறித்தும் , இதனால் ஒரு நாளைக்கு எந்த அளவுக்கு லாபம் கிடைக்கின்றது என்பது குறித்து கேட்டறிந்தார்.