தமிழ்நாட்டில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணிக் கட்சிகளாக இருக்கும் நிலையில் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடவுள்ளது. கர்நாடகத் தேர்தலில் முன்னதாக கூட்டணியில் போட்டியிட அதிமுக விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் அதற்கு போட்டியிட வேண்டாம் கூட்டணிக்கு ஆதரவு மட்டும் அளித்தால் போதும் என்று பாஜக தலைமை கூறிவிட்டதாகத் தகவல் கசிந்தது. இதனைத் தொடர்ந்து கர்நாடகத் தேர்தலில் பாஜக தனது வேட்பாளரை நிறுத்தியுள்ள புலிகேசி நகர் தொகுதியில், அதிமுக சார்பில் கர்நாடக மாநில அவைத் தலைவர் அன்பரசன் போட்டியிடவுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கர்நாடகத்தில் தனித்து போட்டியிடவுள்ளதால் தமிழகத்திலும் கூட்டணி முறிவு ஏற்படும் சூழல் இருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தெரிவித்தாலும், தமிழ்நாடு பாஜகவின் தலைவர் அண்ணாமலை, தொடர்ந்து அதிமுக கூட்டணி குறித்து விமர்சித்தும், அதிமுக ஊழல் பட்டியலை வெளியிடப் போகிறேன் என்றும் தெரிவித்ததால் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முன்னோட்டமாகத்தான் கர்நாடகா தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது என்று ஒரு சாராரும், அண்டை மாநிலமான கர்நாடகாவில் கூட்டணி அமைப்பதும் தேசிய அளவில் வரும்போது நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி கணக்கும் வெவ்வேறாக பார்க்கப்படும் என்று ஒரு சாராரும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுகவை முழுவதுமாக கைப்பற்றியுள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரும் 26 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்கவுள்ளாராம். இந்த சந்திப்பு பாஜக - அதிமுக கூட்டணி குறித்து நீடித்து வரும் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமையும் என்றும் சொல்லப்படுகிறது.