Published on 24/08/2019 | Edited on 24/08/2019
அதிமுகவில் தற்போது முழு அதிகாரத்தையும் எடப்பாடி கைப்பற்றி விட்டதாக தகவல் வருகின்றன. இதனால் ஓபிஎஸ் தரப்புக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஓபிஎஸ்க்கு மத்தியில் செல்வாக்கு இருந்தும் எடப்பாடி வெளிநாட்டு பயணத்தின் போது முதல்வர் பொறுப்பை ஓபிஎஸ்ஸிடம் ஒப்படைக்கவில்லை. இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது அதிமுக கட்சி மற்றும் அரசு சார்பாக வரும் அனைத்து அறிவிப்புகளும், அறிக்கைகளும் நான் உத்தரவிட்டுள்ளேன், நான் அறிவித்துள்ளேன், நான் ஆணையிட்டுள்ளேன் என்றுதான் அறிக்கை ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பின்னர் ஓபிஎஸ், இபிஎஸ் முதல்வராக இருந்த போதும் அம்மாவின் அரசு ஆணை பிறப்பித்துள்ளது என்றுதான் அறிவிப்பு வெளியானது. புது திட்டம் அறிவித்தாலும், அறிக்கை விட்டாலும் அம்மாவின் அரசு என்று தான் கூறிவந்தனர். ஆனால் தற்போது எந்த திட்டம் அறிவித்தாலும், அறிக்கை வெளியிட்டாலும் முதல்வர் எடப்பாடி உத்தரவின் படி வெளி வருவது அதிமுக கட்சியினரை ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளதாக சொல்கின்றனர். இது பற்றி விசாரித்த போது, சமீபத்தில் அமைச்சர் மணிகண்டனை நீக்கி எடப்பாடி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவுக்கு கட்சியில் இருக்கும் அமைச்சர்கள்,நிர்வாகிகள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால் கட்சி மற்றும் ஆட்சி தனது கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கிறது என்று நினைக்கும் எடப்பாடி அதிகாரத்தை முழுமையாக கைப்பற்ற திட்டம் போடுகிறார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். சமீப காலமாக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஜெயலலிதாவை புகழ்வது போல் எடப்பாடியையும் புகழ ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.