பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் முத்து விழா ஜூலை 25ஆம் தேதி சென்னை திருவேற்காட்டில் நடைபெற்றது. பாமகவில் ஜி.கே.மணி இருக்கும் தலைவர் பதவியில் இருந்தவர் தீரன். இவர் பாமகவில் எம்எல்ஏவாக இருந்தவர். ராமதாஸ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி தமிழ் பாமக என்று தொடங்கினார். கட்சியை தொடர்ந்து நடத்த முடியாததால் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு சென்றார். அதிமுக சார்பில் ஊடக விவாதங்களிலும் கலந்து கொண்டார். இந்த நிலையில் ஜூலை 25ஆம் தேதி நடந்த ராமதாஸ் முத்து விழாவில் பாமகவில் இணைந்தார்.
இந்த விழாவில் பேசிய ராமதாஸ், நான் சின்ன வயதில் கஷ்டப்பட்டு படித்தேன். மருத்துவராக ஆனேன். ஏதோ எனக்குள் ஒரு பொறி என்னுடைய மூளையில் தோன்றியது. அந்த பொறிதான் சங்கமாக, கட்சியாக உருவெடுத்தது. கட்சியை வளர்க்க அந்தக் காலத்தில் என்னுடன் உழைத்தவர் தீரன். மறந்துபோன செய்திகளையெல்லாம் சொன்னார் பாராட்டினார் என்ற ராமதாஸ், அதேபோல் பாமகவுக்காக உழைத்தவர்களையெல்லாம் நினைவு கூர்ந்து பேசினார்.
மேலும் தொடர்ந்து பேசிய ராமதாஸ், நான் என்னுடைய பிறந்த நாளை கொண்டாடுவது இல்லை. என்னுடைய உதவியாளரிடம், ''யாரிடமாவது இருந்து போன் வந்தால் எடுக்க வேண்டாம். அப்படி எடுத்தாலும் என்னிடம் கொடுக்க வேண்டாம். ஏனென்றால் எனக்கு வாழ்த்து சொல்லுவார்கள் என்று சொல்லிவிடுவேன்''. பாமக தலைவர் ஜி.கே.மணிதான், ''உங்க பிறந்தநாளை நாங்கள் கொண்டாடவில்லை. பசுமை தாயகம் நாளாக கொண்டாடுகிறோம் என்று சொன்னார்''. மரம் நடும் நாளாக கொண்டாடி வந்தார்கள்.
எனக்கு 80 வயதாகிறது. எனக்கு திருமணம் ஆகி 55 ஆண்டுகள் ஆகிறது. தனது மனைவி சரஸ்வதி அம்மையார் என்னை வழிநடத்தினாரா? இல்லை நான் அவரை வழிநடத்தினேனா என்றால், முழுக்க முழுக்க அவர்தான் என்னை வழிநடத்தினார். அவர் துணை இல்லை என்று சொன்னால் இந்த இயக்கத்தை கண்டிருக்க முடியாது. சரிபாதி என்று சொல்லுவார்கள் மனைவியை. ஆனால் இவர் எனக்கு சரிபாதி அல்ல. அதாவது 50 சதவீதம் அல்ல, 80 சதவீதம். எனக்கு நான்கு கொள்ளு பேரன் பேத்திகள். நானும் சரஸ்வதி அம்மையாரும் கொடுத்து வைத்தவர்கள்.
நான் மூத்த பிள்ளையாக நினைத்திருந்த மாவீரன் குரு இன்று நம்மிடையே இல்லை. அவர் இருந்திருந்தால் இந்த விழா வேறு விதமாக களைக்கட்டியிருக்கும். இந்த விழாவை பிரதமர் மற்றும் முதல்வரை அழைத்து செய்ய வேண்டும் என்று இரண்டு, மூன்று நாட்கள் திட்டம் போட்டார்கள். அன்புமணி வீட்டில் ஆலோசனை நடத்தினார்கள்.
அப்போது நான், அப்படியென்றால் எனக்கு இந்த விழா வேண்டாம். இந்த விழா என்னோடு போராடியவர்களோடு, கட்சிக்காக சிறை சென்றவர்களோடு நடத்த வேண்டும் என்று என்னுடைய மருமகள் சௌமியாவிடம் சொல்லி அனுப்பினேன். ''மாமா சொல்வதுதான் சரி'' என்று சௌமியா சொல்லியிருக்கிறார். சௌமியா சொன்னா அன்புமணி மீறமுடியுமா? அதன்பிறகுதான் இப்படிப்பட்ட விழா நடக்கிறது. இப்படிப்பட்ட விழா தமிழ்நாட்டில் எந்த தலைவருக்கும் நடந்திருக்காது. இந்த நேரத்தில் எந்தக் கட்சியையும் நான் குறை சொல்ல மாட்டேன். குறை சொல்லவும் கூடாது என்றார்.