இட்டுக்கட்டிய கட்டுக்கதைப் புராணங்களே வரலாறு என்போர், உண்மை வரலாறு சுடுவதால், அதற்கு அஞ்சி நடுங்குகிறார்கள்!
அந்த அச்சத்தால், வரலாற்றையே காலிசெய்ய முற்படும் அற்பத்தனத்தைக் கண்டிப்பதுடன், இந்த வக்கிர எண்ணத்தை விட்டுவிட வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்று கூறியுள்ளார் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பல்வேறு தேசிய இனங்களையும் ஒன்றுசேர்த்து இந்தியாவை உருவாக்கித் தந்த பிரிட்டானியர், அதனைப் பாதுகாக்க ஜனநாயக வழிமுறைகளையும் சட்ட நடைமுறைகளையும் வழங்கிவிட்டுத்தான் நாட்டைக் காலி செய்தனர்.
தேசம் என்பது எல்லைக்கோட்டிற்குள் அடங்கிய மண்ணை மட்டுமே குறிப்பதல்ல; முதன்மையாக அது மக்களைத்தான் குறிக்கும் என்பதை உணர்ந்ததோடல்லாமல் நமக்கும் உணர்த்தியவர்கள் பிரிட்டானியர்.
அதனால்தான் வாழையடி வாழையாய் இம்மண்ணில் மக்கள் வாழ்ந்து படைத்துப் பதித்துவந்திருக்கும் வரலாற்றுத் தடங்களைத் தடயங்களைப் போற்றிப் பேணும்படியாய், 1904ஆம் ஆண்டிலேயே பாரம்பரிய சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது பிரிட்டானிய அரசு.
பிறகு கால மாற்றத்தால் அந்த 1904ஆம் ஆண்டுச் சட்டம் மாற்றம் கண்டு, 1958ஆம் ஆண்டில் “தொன்மை நினைவுச்சின்னங்கள், தொல்லியல் தளங்கள் மற்றும் எஞ்சி நிற்பவை சட்டம் (Ancient Monuments and Archaeological Sites and Remains Act, 1958)” என புனரமைக்கப்பட்டது.
இச்சட்டத்தின்படி, வரலாற்றுச் சின்னம் என்று அறிவிக்கப்பட்ட இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவு வரை தடை செய்யப்பட்ட பகுதி; 200 மீட்டர் வரை பாதுகாக்கப்பட்ட பகுதி.
பல்லாயிரம் ஆண்டுகால கட்டுமானங்கள், தடயங்கள் மற்றும் மண்ணில் புதைந்துகிடக்கும் தொல்பொருட்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான், வரையறுக்கப்பட்ட இந்தத் தொலைவுகளுக்குள் எந்தப் பணிக்குமே அனுமதி இல்லை என்று தடை செய்கிறது 1958ஆம் ஆண்டுச் சட்டம்.
ஆனால் மோடி அரசு, கடந்த ஆண்டு, “தொன்மை நினைவுச்சின்னங்கள், தொல்லியல் தளங்கள் மற்றும் எஞ்சி நிற்பவை சட்ட திருத்த மசோதா-2017” என்ற ஒன்றைக் கொண்டுவந்து மக்களவையில் அதை நிறைவேற்றியது.
இந்தச் சட்ட திருத்த மசோதா-2017, வளர்ச்சிப் பணி, பொதுப்பணி, கட்டுமானப் பணிகளுக்கான தடையை உணர்வதால், 1958ஆம் ஆண்டுச் சட்டத் தடைகளையெல்லாம் நீக்குகிறது என்கிறது மோடி அரசு.
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்ட திருத்த மசோதா-2017 தற்போது மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு கடும் எதிர்ப்புக்குள்ளாகியது. அதனால் அது தெரிவுக் குழுவுக்கு (Select committee) அனுப்பப்பட்டிருக்கிறது.
தெரிவுக் குழுவின் முதல் கூட்டம் முடிந்தது; நேற்று இரண்டாவது கூட்டம்; இதில் அதற்கேற்படும் முடிவு, இந்த மண்ணின், மக்களின் வரலாற்றை, அதன் வடிவமாகத் திகழும் பாரம்பரியத் தொன்மைச் சின்னங்களை, தொல்பொருள் தளங்களை முடிவு செய்வதாக இருக்கும்.
மோடி அரசு குறிப்பிடும் வளர்ச்சிப்பணி, பொதுப்பணி, கட்டுமானப் பணி என்றால் என்ன; அவை யாருக்காக என்பதை கடந்த நான்காண்டுகளாகவே நாம் கண்டுவருகிறோம்; அவை இந்த நாட்டின் 87 விழுக்காடு பொருளாதாரத்தை கபளீகரம் செய்திருக்கும் 100க்கும் குறைவான நபர்களுக்காகவே என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.
மக்களுக்கும் இந்த பாஜக மோடி அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; இந்தப் புவிப் பந்தில் எங்குமே இல்லாத, பிறப்பிலேயே மக்களை மேல். கீழாகப் பிரித்து, இதற்கு மேலும் அவர்களை இழிவு செய்ய முடியாது எனும்படியான சாதீயத்தையே சித்தாந்தமாகக் கொண்ட அரசுக்கு மக்களைப் பற்றிய சிந்தனை எப்படி இருக்கும்?
அதனால்தான் மக்கள் பண்பாட்டின் மீதே போர் தொடுத்திருக்கிறது மோடி அரசு; மக்கள் வாழ்வியலின் அனைத்து துறைகளையும் அழிக்கிறது; சமூக நீதியையும் தற்சார்பு பொருளியலையும் சுற்றுச்சூழலையும் கல்வியையும் பறிக்கிறது; இற்றுப்போன பாசிச இந்துத்துவத்தை முன்னிறுத்துகிறது; செத்துப்போன சமஸ்கிருதத்தைத் தோண்டியெடுக்கிறது.
இதற்காக மக்கள் பண்பாட்டை மறுதலிக்க வேண்டிய கட்டாயம்; அதற்காக பாரம்பரிய தடயங்களை அழிக்க வேண்டிய அவசியம் மோடி அரசுக்கு!
நாடு முழுவதிலும் பாரம்பரிய வரலாற்று முக்கியத்துவமுடைய இடங்கள் 3,686; அவற்றில் யுனெஸ்கோவால் உலகப் புகழ் பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டவை 22 எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது.
இதில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 743 நினைவுச்சின்னங்கள்; முகலாயர்களால் கட்டப்பட்டவை. தமிழ்நாட்டில் 413 தொல்லியல் சின்னங்கள்; பழந்தமிழர் பண்பாட்டை நாகரிகத்தைப் பறைசாற்றுபவை. இவை இந்துத்துவத்திற்கு எதிரான வரலாற்று விழுமியங்கள்!
அதனால், அவற்றை அழித்தொழிக்கவும் செய்யலாம்; அவற்றின் மீது பாலங்கள், பலவழிச் சாலைகள் போட்டு கார்ப்பொரேட்டுகளின் தொப்பையை மேலும் பெருக்கவும் செய்யலாம் என்கிற வக்கிர எண்ணம் தவிர வேறென்ன?
தமிழ்நாட்டில் ஆதிச்சநெல்லூர், கீழடி, பட்டறைப்பெரும்புதூர், இன்னும் பிற அகழ்வாய்வுகள் தமிழர் நாகரிகமே உலகில் தலையாயது, தொன்மையானது எனச் சான்று பகர்கின்றன.
ஆனால் இவற்றை முடக்கிவைத்திருக்கும் மோடி அரசு, நிரந்தரமாக அவற்றை அழித்தொழித்துவிடவே இந்த “தொன்மை நினைவுச்சின்னங்கள், தொல்லியல் தளங்கள் மற்றும் எஞ்சி நிற்பவை சட்ட திருத்த மசோதா-2017”ஐக் கொண்டுவந்திருக்கிறது; இந்த மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அதை நிறைவேற்றவிருக்கிறது.
இந்தக் கயமைத் திட்டத்தை முறியடித்தாக வேண்டும்!
அணையும் தறுவாயில் அதீத ஒளி பளிச்சிடுவது போல், போகிற சமயத்தில் பொல்லாங்கு செய்கிறது பாஜக மோடி அரசு!
இட்டுக்கட்டிய கட்டுக்கதைப் புராணங்களே வரலாறு என்போர், உண்மை வரலாறு சுடுவதால், அதற்கு அஞ்சி நடுங்குகிறார்கள்!
அந்த அச்சத்தால், வரலாற்றையே காலிசெய்ய முற்படும் அற்பத்தனத்தைக் கண்டிப்பதுடன், இந்த வக்கிர எண்ணத்தை விட்டுவிட வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!