முதலமைச்சர் ஸ்டாலின் முதல்வராக இருப்பதற்கு காரணம் தான் தான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னை கே.கே. நகரில் நாம் தமிழர் கட்சியின் ‘தமிழ்ப் பாதுகாப்பு பாசறை’ தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
இந்நிகழ்விற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “எல்லோருக்கும் தெரியும். கிராமங்களில் திண்ணைகளில் சீட்டு ஆடியவர்களை ஜெயிலில் போட்டுள்ளார்கள். ஆன்லைனில் விளையாடுவது அறிவுத்திறன் சார்ந்தது எனப் பேசும் கூட்டம் உள்ளது. சூதாட்டத்தில் என்ன திறன் உள்ளது. அதை தடை செய்யுங்கள் என்றால் ஆளுநர் கையெழுத்துப் போடவில்லை. சட்டம் போட்டால் சட்டம் செயலாக்கம் பெற வேண்டுமே. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது இல்லை பிரச்சனை. அர்ச்சனை தமிழில் இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்.
நான் ஓட்டைப் பிரிக்க வந்த ஆள் இல்லை. நாட்டைப் பிடிக்க வந்த ஆள். நாம் தமிழர் கட்சி அதிமுக, பாஜக ஆகியோரின் பி டீம் எனச் சொல்கிறார்கள். அப்படிப் பார்த்தால் நான் இல்லையென்றால் திமுக ஆட்சிக்கே வந்திருக்காது. மு.க.ஸ்டாலின் முதல்வராகவே ஆகி இருக்கமாட்டார். 37 இடங்களில் 400 முதல் 500 வாக்குகளில் தான் அதிமுக தோற்றது. அந்த இடங்களில் 20,000 ஆயிரம் முதல் 50,000 வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. என்னால் தான் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. அப்போ திமுகவின் பி டீம் நானா? இன்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பதற்கு காரணம் நான் தான். தமிழ்தேசிய அரசியலில் நாங்கள் தான் நம்பர்.1” எனக் கூறினார்.