2014 டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு, புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.
மேலும், இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு அவை விசாரிக்கப்பட்டும் வருகின்றன. சிஏஏ எனப்படும் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறி குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமானது. அதன் பிறகு, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி இந்த சட்டம் அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், இதற்காக விதிமுறைகள் முழுமையாக வகுக்கப்பட்ட பிறகு இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் மீண்டும் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழகத்திலிருந்து மீண்டும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆட்சியில் இருக்கும்போது பாஜகவுடன் கூட்டு; ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு என சிறுபான்மையினருக்கு திமுக துரோகம் செய்து வருகிறது. கோவை கலவரத்தை கைக்கட்டி வேடிக்கை பார்த்து இஸ்லாமியர்களின் முதுகில் குத்திய திமுகவிற்கு எங்களை நோக்கி கை நீட்டி பேச அருகதை இல்லை. சிஏஏ சட்டத்தால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது. சிஏஏ சட்டத்தால் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டால் எங்கள் அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என ஏற்கனவே ஆட்சியில் இருந்தபோது சட்டமன்றத்தில் நாங்கள் தெரிவித்தோம்' எனக் கூறியுள்ளார்.