மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளராக வைகோ அவர்களது மகன் துரை வைகோ சமீபத்தில் பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து பல தரப்பினரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தனர். அந்த வகையில், அதுகுறித்த சில கேள்விகளுடன் நாம் அவரை நேரில் சந்தித்தோம். அதற்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு...
பிஸினஸ்ல பிசியாவே இருந்தீங்க. அது தொடர்பாவே இயங்கிட்டிருந்தீங்க. இப்ப திடீரென அரசியல். இது தொடர்பான இந்த சந்திப்புகள் எல்லாம் எப்படி இருக்கு?
அதாவது புலி வாலைப் பிடிக்க போறோம்னு தெரியும். சமீபத்தில் பொறுப்பு கொடுத்த பிறகு இடைவிடாத பயணம் செய்றேன். எப்பொழுதும் வாரத்திற்கு 5 முறையாவது உடற்பயிற்சி மேற்கொள்வேன். ஆனால், இந்த இரண்டு மாதமா ஒருநாள் கூட உடற்பயிற்சி எதுவும் செய்யவில்லை. என்னுடைய குழந்தைகள் கிட்ட ஒருநாள் தான் பேசியிருப்பேன். இது ஒரு கடினமான பயணம் என்பதை தொடக்கமே புரியவைத்துவிட்டது.
உங்கள் கல்லூரி காலம் எப்படிப்பட்டது? அந்தக் காலகட்டத்தில் வைகோ பற்றி பரபரப்பாக பல செய்திகள் வரும். அப்போது உங்களுடன் படித்தவர்கள் எப்படி பேசுவார்கள்?
நான் 1992 முதல் 1994 வரை கோயம்புத்தூரில் படித்துக்கொண்டிருந்தேன். அப்ப நீங்கள் சொல்வதுபோல அதிகம் நடக்கும். அந்த சமயத்தில்தான் பிரச்சனை வந்து இயக்கத்தைவிட்டு வெளியேறுகிறார். அந்த நேரத்திலும் அரசியல் எனக்கு ரொம்ப ஈர்ப்பு கிடையாது. இருந்தாலும் அப்பப்போ பத்திரிகை செய்திகளில் பார்க்கும்போது அப்பாவுடைய போராட்டத்தை செய்திகளாய் பார்ப்பேனே தவிர, ரொம்பவும் வியப்பு கிடையாது. நிறைய பேர் இன்னாரு பையன் என சொல்லிட்டு என்கிட்ட ரொம்ப பாசமாக பேசுவார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய படிப்பு, இளமைக்கால சேட்டைகள் அதில்தான் கவனம் இருந்ததே தவிர, அரசியல் சம்பந்தப்பட்ட எந்த ஒரு கவனமும் இல்லை.
படிப்பு, விளையாட்டுன்னுதான் என்னுடைய வாழ்க்கை போச்சே தவிர, அரசியல் மீது ஈர்ப்பு கிடையாது. ஆனால் சென்னைக்கு வீட்டுக்குள் வரும்போது ஒரு பரபரப்பான சூழலாகத்தான் இருக்கும். சில சமயங்களில் பதற்றமான சில செய்திகள் வரும்போது மனசு பாதிக்கப்பட்டிருக்கிறேன். அதே மாதிரி நிறைய சம்பவங்கள் கேட்டுருக்கேன், பாத்திருக்கிறேன், அனுபவிச்சிருக்கிறேன். அதையும் அந்த சமயத்தில் நான் தவிர்க்க முடியாது. ஆனாலும், அந்தக் காலகட்டத்தைப் பொறுத்தவரையில் அரசியலில் ரொம்ப கவனம் இருந்தது கிடையாது.
வாரிசு அரசியல், வாரிசு அரசியல்னு தொடர்ந்து ஒரு கருத்து வருது. அதை எதிர்கொள்வது கடினமாக இருக்கிறதா?
நிச்சயமாக இல்லை.. எங்க இயக்கம் மற்றும் தலைவர் வைகோ பொறுத்தவரையில் இந்த விஷயத்தில் வெளிப்படையாக ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் தெளிவுப்படுத்தியிருக்கிறோம். தலைமை கழக நிர்வாகி என்கிற நியமன பதவியை, கட்சியின் பொதுச்செயலாளர் என்கிற சட்டத்திட்டத்தின்படி அவர் அறிவித்துவிட்டு சென்றிருக்கலாம். ஆனால், அப்படி செய்யவில்லை. பொதுச்செயலாளருடைய மகன் என்பதால் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாளைக்கு இவர்கள் இவர்களுக்கு வாக்கு போட்டனர் என்று தெரிந்தால் பிரச்சனை என்பதால் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனால்தான் ‘வர வேண்டும், வர வேண்டாம்’ என இரண்டு மட்டும் வைத்து அனைவரும் சுதந்திரமாக ஓட்டு போட்டனர். அதில் 106 பேர் வர வேண்டும் என்றும், இரண்டு பேர் வேண்டாம் என்றும் வாக்களித்துள்ளனர். அதிலும் 8 பேர் வரவில்லை. வராதவர்களில் சிலர் மருத்துவ காரணத்தால் வர முடியவில்லை என கடிதங்கள் அனுப்பியுள்ளனர். மேலும், சிலருக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்கும் என நினைக்கிறேன். நூற்றுக்கு நூறு ஆதரவான கருத்துகள் இருந்தால் அது பொய்தான். அதனால் ஜனநாயக நாட்டில் மாறுபட்ட கருத்துகளும் இருக்க வேண்டும் அப்போதான் அது உண்மை. மாறுபட்ட கருத்துகள் தெரிவித்தவர்களுக்கு ஏன் ஆதரிக்கவில்லை என அவர்கள் வருந்தும் அளவிற்கு என்னுடைய செயல்பாடு இருக்கும். இதை நான் ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன்.
நான்கு வருடங்களுக்கு முன்புதான் நீங்கள் கட்சியுடன் நெருங்கிய தொடர்பில் வந்ததாக கூறுகிறார்களே?
தொடர்பு என்று சொல்லப்போனா அது இப்ப வந்த தொடர்புகள் கிடையாது. அதாவது இயக்கம் தொடங்கியதில் இருந்தே தலைவருடன் நெருங்கிய நிர்வாகிகளுடன் எனக்கு எப்பவுமே தொடர்பு இருந்தது. அப்பாவுடைய உடல்நலம் விஷயங்களிலும் கவனம் இருக்கும். தேர்தல் சமயங்கள், விருதுநகருக்குச் சென்று சாதாரண தொண்டனாக வாக்கு சேகரித்திருக்கிறேன். இவ்வாறான பலவற்றை ஒருங்கிணைப்பது 1994இல் இருந்து எனது பணியாக இருந்திருக்கிறது. அதேபோல், தலைவருடன் நடைபயணங்களிலும் பங்கேற்றிருக்கிறேன். என்னுடைய பங்களிப்பு என்பது இத்தனை வருடங்களாக தொடர்ந்துதான் வந்திருக்கிறேன். இப்போ சமீபத்தில் 3 வருடங்களாக மாநில நிர்வாகிகளுடன் தொடர்பில் இருக்கிறேன். காரணம், அந்தச் சூழல் வந்திருக்கிறது. தலைவருக்கு முக்கியமான விஷயங்களை சொல்றதிலும் மூன்று வருடங்களாகவே அவருடன் இருந்திருக்கிறேன். பொடா வழக்கில் தலைவர் கைதாகி இருக்கும்போது கிட்டதட்ட இரண்டு வருடங்கள் முக்கியமான நிகழ்வுகள் நடந்த எல்லா இடங்களுக்கும் போயிட்டுதான் இருந்தேன். அவை அனைத்தும் புதுசு கிடையாது.
சமூக வலைத்தளங்களில் ஒரு காலத்தில் வைகோவின் பேச்சுகளைப் புகழ்ந்து போட்டுட்டிருந்தாங்க. அதன் பின்பு ஒரு காலத்தில் அவரை விமர்சித்துப் போட ஆரம்பித்தார்கள். அதை எல்லாம் கவனித்திருப்பீர்கள். அந்த நேரத்தில் அதை எப்படி பார்த்தீர்கள்?
அரசியல், பொதுவாழ்க்கைக்கு வந்த பின்பு விமர்சனம், கேலி, கிண்டல் இதை எல்லாம் நாம் தவிர்க்க முடியாது. அதை தவிர்த்தால் அரசியல்வாதி என்று யாரும் இருக்கமாட்டார்கள். அது ஒரு சீசன் மாதிரி, வைகோ சீசன், விஜயகாந்த் சீசன், பாஜகவில் இருந்து தற்போது கவர்னராக இருக்கும் அந்த அம்மையார், அண்ணன் அன்புமணி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் என எல்லோர் பற்றியும் விமர்சனங்கள் எல்லாம் இருந்தது. அதனால் பொதுவாழ்க்கை என்று வந்தால் அதையெல்லாம் தவிர்க்க முடியாது. இதைப் பொறுத்தவரையில் எனக்கு ஒன்னும் தெரியவில்லை. ஆனால் என்னுடைய பையன், தாத்தாவைப் பற்றி சோசியல் மீடியாவில் போஸ்ட் போடுகிறார்களே என்று டிஸ்டர்ப் ஆனான். வாலிப பருவத்தில் இருக்கிறான், அதனால் அவனுக்கு அது ரொம்ப டிஸ்டர்ப்ட் ஆக இருக்கிறது. அப்படிப்பட்ட நிலைகளில், "நான் சின்ன வயதில் இருக்கும்போது நெருடலான ஒரு நிலை வந்தது. ஆனால் அதைத் தாண்டி போகணும்"னு தாத்தா சொல்லியிருக்காங்கன்னு சொல்லிருக்கிறேன்.
நீங்க ஒரு பேட்டியில் பெரியாரும் பெருமாளும் ஒன்னுதான்னு சொல்லிருந்தீங்க. அதை மக்கள் ஏற்பார்கள்னு நினைக்கிறீங்களா?
மக்கள் ஏற்பாங்களான்னு யோசிச்சா பெரியார் அன்னைக்கு இயங்கிருக்கவே முடியாது. இருந்தாலும், சமூகநீதிக்கான பல கருத்துகளை அவர் சொன்னார். பெரியாரும் பெருமாளும் ஒன்னுன்னு சொல்றதுக்கு விளக்கமும் கொடுத்திருக்கிறேன். பெரியார் இல்லைன்னா இன்னைக்கு நம்மளைப் போன்று நிறைய பேர் கோவிலுக்குள்ளேயே போக முடியாது. கோவிலுக்குள் சென்று கடவுளைப் பார்க்கிறோம். அந்தக் கேட் பாஸைக் கொடுத்ததுதான் பெரியார். அதே நேரத்தில் திராவிட இயக்கங்கள் கடவுளுக்கும் கோவில்களுக்கும் எதிரி கிடையாது. மூட நம்பிக்கைக்கு மட்டும்தான் எதிரி. பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டோம், பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம்னுதான் அண்ணா சொல்லியிருக்கிறார். அதேபோல், எங்க தலைவர் எப்படி சொல்லியிருக்கிறார் என்றால், திருக்கோவில்களில் பிரார்த்தனை நடக்கட்டும், ஆலயங்களில் ஜெபக்கூட்டம் நடக்கட்டும், மசூதிகளில் தொழுகை நடக்கட்டும். அதே நேரத்தில் பகுத்தறிவு பிரச்சாரங்களும் நடக்கட்டும் என்று கூறியிருக்கிறார். ஒரு நாட்டைப் பொறுத்தவரையில் பல பேர் பலதரப்பட்ட நம்பிக்கையில் இருப்பார்கள். அதில் மாறுபட்ட சிந்தனை ஒருவருக்காவது இருக்கும். அதுக்கு நம்ம இடையூறாக இருக்கக் கூடாது. எல்லாருடைய நம்பிக்கையையும் மதிக்க வேண்டும் என்பதுதான் தலைவருடைய கொள்கை. அதை வைத்துதான் நான் பெரியாரும் பெருமாளும் ஒன்று என கூறினேன். இதனை நான் வாக்கு அரசியலாக பார்க்கவில்லை. நான் வெளிப்படையாகவே கூறியிருக்கிறேன், எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு.