மத்திய அரசிடமிருந்து நீட் தேர்வுக்கு விலக்கு கோருவதற்கான தமிழக அரசின் நீட் தேர்வு விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியிருந்தது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தநிலையில், அது தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தமிழக முதல்வர் கடந்த ஐந்தாம் தேதி கூட்டியிருந்தார். அக்கூட்டத்தில் அதிமுக கலந்து கொள்ளாத நிலையில் 'பாஜகவிற்கு பல்லக்கு தூக்குவதையே ஓபிஎஸ் செய்து வருகிறார். நீட் தேர்வுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனையில் அதிமுகப் பங்கேற்காமல் ஊருக்கு உபதேசம் செய்து வருகிறது' என தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனங்களை வைத்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ''யாருக்கும் கைக்கட்டி நிற்க வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை. மக்கள் நலனுக்காகவே மத்திய அரசுடன் ஒத்துழைப்பில் இருக்கிறோம். நீட் தேர்வுக்கு மூலகாரணமாக திமுக இருந்ததை மூடிமறைக்க தற்போது அதிமுக மீது வீண் பழி சுமத்துகிறது திமுக அரசு. நீட் தேர்வு ரத்துக்கு அதிமுக தொடர்ந்து குரல் கொடுக்கும். கொடுத்துக்கொண்டே இருக்கும். நீட் தேர்வு ரத்து செய்ய திமுக அரசு முனைப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.