நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் கே.பி.ராமலிங்கம். பழைய அ.தி.மு.க.காரர். திமுகவில் அழகிரி ஆதரவாளர். லோக்சபா-ராஜ்யசபா முன்னாள் எம்.பி என முக்கியத்துவங்கள் உண்டு. இயற்கை நீர்வளப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் பத்திரிகைகளில் அவருடைய கருத்துகள் இடம்பெறும். அனைத்துக் கட்சிக் கூட்டம் வேண்டாம் என்ற அறிக்கையில், ஆளுங்கட்சியையும், பிரதமரையும் வானளாவப் புகழ்ந்ததோடு, "ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டுவது என்பது, தங்களை வளர்த்துக் கொள்வதற்கும், தங்களின் தனித்துவத்தை காட்டுவதற்கும்தான் பயன்படுமேயன்றி, நாட்டுக்குப் பயன்படாது' என்று, திமுக தலைமையை விமர்சித்த நிலையில், அவரது கட்சிப் பதவியைப் பறித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
ஒழுங்கு நடவடிக்கை குறித்து கே.பி.ராமலிங்கத்திடம் பேசினோம். "கரோனா வைரஸால் ஊரே முடங்கிக் கிடக்கிறது. இந்த நேரத்தில் நாம் அரசாங்கத்தை தட்டிக்கொடுத்துதான் வேலை வாங்க வேண்டுமே தவிர, அவர்கள்மீது குறைசொல்லிக் கொண்டு இருக்கக் கூடாது என்பதற்காக பொதுவாகத்தான் ஒரு அறிக்கையை வெளியிட்டேன். நான் திமுக விவசாய அணி செயலாளராக இந்த அறிக்கையை வெளியிடவில்லை. இயற்கை நீர்வளப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவராகத்தான் என் கருத்தைச் சொல்லி இருக்கிறேன். திமுக தலைவருக்கு என்னை பதவியில் இருந்து நீக்க உரிமை இருக்கிறது. அதில் நான் குற்றம் காணவில்லை. எனக்கு இந்த பதவியைக் கொடுத்தவர் கலைஞர்; பறித்துக் கொண்டவர் தளபதி. பரவாயில்லை'' என்ற கே.பி.ராமலிங்கத்திடம், ''நீங்கள் வேறு கட்சியில் இணையப் போவதாக தகவல்கள் வருகின்றனவே?,'' எனக்கேட்டோம்.
''1990ல் திமுகவில் சேர்ந்தேன். 1996 முதல் என் பதவி பறிப்புக்கு முன்பு வரை திமுக விவசாய அணி மாநில செயலாளராக இருந்திருக்கிறேன். கடந்த 24 ஆண்டுகளில் நான் ஒருமுறை கூட எந்த நடவடிக்கைக்கும் ஆளானதில்லை.
திமுக விவசாய அணி செயலாளர் பதவி இல்லாவிட்டாலும்கூட, இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத் தலைவராக செயல்படுவேன். விவசாயிகளுக்கு யார் நல்லது செய்தாலும் பாராட்டுவேன். தப்பு செய்தால் கண்டிப்பேன். கரோனா முடியும் வரை, எந்த ஒரு அரசியல் லாவண்யம் செய்யும் சிந்தனையும் எனக்கு இல்லை. கரோனா சீசன் முடிந்த பிறகு பேசுவோம். ஆனால் ஒன்று... எந்த விளைவுகளுக்கும் அதற்கு உண்டான எதிர் விளைவுகளும் இருக்கத்தான் செய்யும்'' என்று பொடி வைத்து முடித்தார் கேபிஆர்.
அவர் ஆளுங்கட்சியில் சேரலாம்; அல்லது ரஜினி கட்சித் தொடங்கும்பட்சத்தில் அதில் சேரலாம், பா.ஜ.க. அழைக்கிறது என யூகங்கள் வெளியாகின்றன. கரோனா காலத்திற்குப் பிறகு, கே.பி.ராமலிங்கத்தின் வியூகம் என்ன என்பது தெரியும்.