நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரன் கட்சி படு தோல்வியை சந்தித்தது. இதனால் தினகரன் கட்சியிலிருந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திமுக, அதிமுக கட்சியில் இணைந்து வந்தனர். இது கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனையடுத்து கட்சியை வலுப்படுத்த வேண்டுமென்றால் சிறையில் இருக்கும் சசிகலாவை வெளியே கொண்டுவருவது தான் ஒரே வழி என்று தினகரன் நினைத்ததாக சொல்லப்படுகிறது.
சசிகலா சிறைக்கு போய் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் ஆவதால் நன்னடத்தை விதிகளின் படி, டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவார் என அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்து இருந்தார். அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலாவை வெளியில் எடுக்க சட்ட ரீதியான முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம் நிச்சயம் வெளியே வருவார் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான நான்கு நாள் விவாதத்திற்கு பிறகு கடந்த செவ்வாய்கிழமை மாலை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.க கூட்டணி ஆட்சிக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவானதால், முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
இதனையடுத்து பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் பல்வேறு குழப்பங்கள், கூட்டங்களுக்கு பின் இன்று எடியூரப்பா பாஜக சார்பில் ஆட்சியமைக்க உரிமை கோரினார். மேலும் இன்று மாலை 6 மணிக்கு எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்பார் என்று அறிவித்தனர். கர்நாடகாவில் பாஜக அரசு ஆட்சிக்கு வரும் சூழல் உருவாகி வருவதால் சசிகலாவை நன்னடத்தை விதிகளின் கீழ் விடுவிப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர். இதனால் தினகரன் மற்றும் சசிகலா தரப்பு அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.