'லால்குடி சட்டமன்றத் தொகுதிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராஜாராம் வாபஸ் பெறப்படுகிறார்' என்று அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
அதேபோல், அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் மூன்றாவது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதன்படி, பெரம்பலூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன், தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் அறிவுடைநம்பி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இன்னும், பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு மட்டும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே, அ.தி.மு.க. தலைமை வெளியிட்டிருந்த முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 6 பேர், இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 171 பேர், மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 2 பேர் என இதுவரை மொத்தம் 179 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அ.தி.மு.க. தலைமை வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸுக்கு லால்குடி சட்டமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளரை அக்கட்சித் தலைமை வாபஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.