ஓ.பன்னீர்செல்வத்தை ஒட்டுமொத்தமாக ஓரம்கட்ட எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து காய் நகர்த்துகிறார். பாராளுமன்றத்தின் ஒரே ஒரு மக்களவை உறுப்பினரான பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் என்ன பாராளுமன்றத்தில் பேச வேண்டும்? எதை பேச வேண்டும்? என எவ்விதமான ஆலோசனைகளையும் எடப்பாடி பழனிசாமி சொல்வதில்லை. இதனால், தான் அமைத்துள்ள நான்கு பேர் கொண்ட தனது நண்பர்கள் குழு சொல்வதை பாராளுமன்றத்தில் பேசுகிறார் ரவீந்திரநாத்குமார்.
அப்படித்தான் முத்தலாக் மசோதா பற்றி பாஜகவின் நிலையை ஆதரித்து ரவீந்திரநாத்குமார் பேச, முத்தலாக் மசோதாவை எதிர்த்து முன்பு அன்வர்ராஜா பேசிய பேச்சுக்களை குறிப்பிட்டு அதிமுகவை மீம்ஸ்களில் சிலர் போட்டு கிண்டல் அடித்துள்ளனர். பாஜகவின் மறுபதிப்பாகவே அதிமுக மாறிவிட்டது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் எதிர்த்து அறிக்கை வெளியிட்டார்.
இந்த நிலையில் வேலூர் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என பாஜக உத்தரவிட்டிருப்பதால் ஒருவிதமான தற்காலிக அமைதி அதிமுகவில் நிலவுகிறது. இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் எடப்பாடி பழனிசாமி மேல் தெரிவித்த புகார்கள், தன்னை பொதுச்செயலாளராக நியமிக்க வேண்டும் என வைத்த கோரிக்கை எதிர்காலத்தில் அவரது மகனுக்கு மந்திரி பதவி அளிப்பது ஆகியவற்றை முடிவு செய்ய எடப்பாடி பழனிசாமி, தங்கமணி மற்றும் வேலுமணி அடங்கிய டீமை மத்திய அரசை சந்திக்க அனுப்புகிறார்.