மணிப்பூர் விவகாரம், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மானம் உள்ளிட்டவை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் கலைப் பிரிவைச் சேர்ந்த கே.சந்திரசேகரன் நமக்கு அளித்த பேட்டி.
மணிப்பூர் குறித்து நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி பேசத் தயாராக இருந்தாலும், அதனைக் கேட்க காங்கிரஸ் தயாராக இல்லை என மத்திய அமைச்சர்கள் தெரிவிக்கிறார்களே?
இதில் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். ஒன்று, உள்துறை அமைச்சர் மணிப்பூருக்கு சென்று வந்தும் அங்கு அமைதி திரும்பவில்லை. அப்படியென்றால், உள்துறை அமைச்சர் பேச்சுக்கும் அந்த மாநிலம் கட்டுப்படவில்லை. அவரும், அதில் தவறிவிட்டார் என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கும் இவர்கள் 176 விதியின் கீழ்தான் குறுகிய கால விவாதம் நடத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், அந்த விதிக்கும், 267 விதிக்கும் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. 176 விதியின் கீழ் விவாதம் நடத்தப்படும் போது, நாடாளுமன்றத்தில் பல கட்சிகளை சேர்ந்தவர்களை இரண்டு நிமிடங்கள் பேச விடுவார்கள். அந்த விவாதங்களுக்கு அமைச்சர் தான் பதிலளிக்க வேண்டுமென்ற எந்த அவசியமும் இல்லை. இறுதியில் அமைச்சர் பதில் கூட அளிக்காமல் வெளியே சென்று விடுவார். அந்த அளவிற்கு இருப்பது 176 விதி விவாதம். ஆனால், 267 விதி என்பது, அனைத்து பிரச்சனைகளையும் ஒத்திவைத்து ஒரு நாள் விவாதம் நடத்தலாம். கிட்டத்தட்ட 10, 12 நாட்கள் சபை முடங்கி இருக்கிறது. இவர்கள், 267 விதியின் கீழ் விவாதம் நடத்த அனுமதித்திருந்தால் கூட ஒரே நாளில் இந்த பிரச்சனை முடிந்திருக்கும்.
இரண்டாவது, ஒரு மாநிலத்தில் கலவரம் நடக்கும் போது ஒரு அரசு நினைத்தால் இரண்டே நாளில் அந்தக் கலவரத்தை அடக்க முடியும். எந்த மாநிலமாக இருந்தாலும் சரி அதிகபட்சமாக இரண்டே நாட்களில் கலவரத்தை அடக்க முடியும். பரப்பளவில் சென்னை அளவிற்குக் கூட இல்லாத அந்த மாநிலத்தை, இரண்டு நாட்களில் கலவரத்தை அடக்கியிருக்க முடியும். கலவரம் தொடர்ந்தது என்றால் இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்று, மத்திய அரசு அலட்சியமாக இருந்திருக்கும். இரண்டாவது, மாநில அரசு ஏதாவது ஒரு தரப்புக்கு ஆதரவாக இருந்திருக்கும். இந்த விவகாரத்தில் இரண்டுமே நடந்து இருக்கிறது.
மணிப்பூரில் பா.ஜ.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தான் அங்கு ராணுவம் வளர்க்கப்பட்டு அமைதி இருக்கிறது என்று சொல்கிறார்களே?
எங்களுடைய ஆட்சியான இரட்டை என்ஜின் ஆட்சி வந்த பிறகு தான் வடகிழக்கு மாநிலங்களே ஒளிர்ந்திருக்கிறது என்று பிரதமர் மார்தட்டி பேசினார். ஆனால், இந்த மூன்று மாதக் கலவரம் நடக்கும் போது அவர் ஏன் மணிப்பூர் என்ற வார்த்தையே உச்சரிக்கவில்லை. கடந்த முறை பிரச்சாரத்தின் போது இதே மணிப்பூருக்கு சென்று ஒரு தலைப்பாகை அணிந்து, மணிப்பூர் உடை அணிந்து கொண்டு என்னுடைய உடையைப் பார்த்து காங்கிரஸ் கட்சி கிண்டல் அடிக்கிறது என்று பிரதமர் பேசினார். ஆனால், அதே மாநிலத்தில் இரண்டு பெண்கள் உடையே இல்லாமல் அழைத்து சென்ற போது இவர் ஏன் வாயே திறக்கவில்லை என்பது தான் எங்களுடைய கேள்வி.
ராகுல் காந்தியும், இந்தியா கூட்டணி எம்.பி.க்களும் மணிப்பூருக்கு சென்ற பிறகு தான் அங்கு பிரச்சனை அதிகமானது என்று சொல்கிறார்களே?
இதையே தான் அவர்கள் குற்றச்சாட்டுகளாக வைக்கின்றனர். உள்துறை அமைச்சர் சென்று பார்த்தார் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், உள்துறை இணை அமைச்சர் எங்கு போனார்? ராகுல் காந்தி, இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் சென்று பார்த்து நிலவரத்தை அறிந்தனர். ராகுல் காந்தி அங்கு சென்று எந்த அரசியலையும் பேசவில்லை. அவர், அங்கு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்கள் குறைகளைக் கேட்டு அறிந்தார். அங்கு சென்று அந்த மாநில ஆளுநரை சந்தித்து இந்த இடங்களில் பிரச்சனைகள் இருக்கிறது அதை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றுதான் கூறினார்.
ராகுல் காந்தி வருவதை அந்த மாநில பா.ஜ.க தலைவரே ஆதரித்து அறிக்கை விட்டிருந்தார். அதே மாதிரி குக்கி இன 10 எம்.எல்.ஏ.க்கள் அறிக்கை விட்டிருந்தார்கள். அதில் 7 எம்.எல்.ஏக்கள் பா.ஜ.க வை சேர்ந்தவர்கள். அவர்களே, இந்த மாநிலத்தில் பா.ஜ.க தோல்வி அடைந்து விட்டது என்று அறிக்கை விட்டிருந்தார்கள். அதற்கு பிறகும், அந்த மாநில முதல்வரை மாற்றாமல் வைத்திருக்கும் காரணம் என்ன என்பது தான் எங்களுக்கு புரியவில்லை.
அந்த முதல்வர் ராஜினாமா செய்யும் போது அந்த மாநில மக்கள் போராட்டம் செய்ததாக செய்தி வந்ததே?
முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் ஃபேக்ஸில் கூட அனுப்பியிருக்கலாம். அவர் பாக்கெட்டில் ராஜினாமா கடிதத்தை வைத்திருந்த போது அதை வாங்கி கிழித்து போட்ட மாதிரி பேசுகிறார்கள். இவர்கள் நடத்தும் நாடகத்தை எல்லாம் மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள். அதற்கு யாரும் தயாராக இல்லை. ஏனென்றால், அவர் ஒரு தரப்பிற்கு மட்டும் ஆதரவாக நடந்து கொள்கிறார் என்பது தான் அங்கு உள்ளவர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. இரண்டு குழுவினருக்கு மோதல் நடக்கும் பொழுது, முதல்வர் ஒரு சார்பாக நடந்து கொள்கிறார் என்றால் அவரை நீக்கிவிட்டு அங்கு அரசியல் நடத்துவதில் என்ன பிரச்சனை இருக்க போகிறது. ஆளுநர் ஆட்சியைக் கொண்டு வந்தால் கூட அங்கு பா.ஜ.க ஆட்சி தான். அப்படி இருக்கும்போது, அதைச் செய்வதில் அவர்களுக்கு ஏன் தயக்கம் என்று தான் எங்களுக்கு தெரியவில்லை.
பிரதமர் மோடி, கலவரம் நடந்த மணிப்பூருக்கு செல்லவில்லை என்றாலும் பரவாயில்லை. எல்லாவற்றுக்கும், நடிகர்களின் தாயார் இறந்த துக்கத்திற்கெல்லாம் ட்விட் போட்டு ஆறுதல் சொல்லும் மோடி, இரண்டு மாதமாக இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு மாநிலம் எரிந்து கொண்டிருக்கும் போது, ஒரு வேண்டுகோள் விடுத்து ஒரு அறிக்கையை ட்விட்டரில் போடகூடாதா. மணிப்பூர் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கலாம். ஒன்று அமைதிக்கான வேண்டுகோள் விடுக்க வேண்டும். இரண்டாவது, கலவரம் நடத்துபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்திருக்க வேண்டும். ஆனால், இதை இரண்டுமே செய்யவில்லை.
இதைச் செய்யவில்லை என்றால், இவர்களே அந்த கலவரத்தை ஊக்குவிக்கிறார்களோ என்ற சந்தேகம் அந்த மக்களுக்கு எழுகிறது. ஏன் இந்திய மக்களுக்குமே எழுகிறது. அது நியாயம் தானே.