மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளைத் தடுப்பதற்குரிய அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரும், பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சனைக் குறித்துத் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை விளக்கி, தமிழ்நாடு விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும், அண்மையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து, இந்தப் பிரச்சனையில் மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
மேலும், மேகதாது அணை அமைக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது எனக் கோரி கர்நாடக முதலமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியபோது, இந்த அணை கட்டுவதால், தமிழ்நாடு விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் என்றும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இது எதிராய் அமையும் என்றும் திட்டவட்டமாக விளக்கி, இந்த அணை அமைந்திட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என உறுதிப்படத் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கர்நாடக முதலமைச்சருக்குப் பதில் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் இன்று (12.07.2021) சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் வந்தனர்.