கரோனா ஊரடங்கு அறிவித்து கிட்டத்தட்ட இரு மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் பெரும்பான்மையான மக்கள் வேலைக்குச் செல்லமுடியாமலும் மாதாந்திரச் செலவுகளையும் சமாளிக்கமுடியாமல் தவித்துவருகின்றனர். ஆனால் தனியார் நிதி நிறுவனங்களோ இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் கடன்வாங்கியவர்களை தவணைப் பாக்கியைக் கட்டச்சொல்லி நெருக்க ஆரம்பித்துள்ளன.
இராஜபாளையம் தொகுதியில் தனியார் பைனான்ஸ், மற்றும் நிதி நிறுவனங்களில் கடன்வாங்கிய மகளிர் குழுக்களை வட்டியையும் தவணையையும் கட்டச்சொல்லி வற்புறுத்துவதாக இராஜபாளையம் திருவள்ளுவர் தெரு குழு ஒன்றிலிருந்து பொன்களஞ்சியம் என்பவர், எம்.எல்.ஏ. தங்கபாண்டியனை தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தங்கபாண்டியன், ஆசீர்வாத் மைக்ரோபைனான்ஸ் நிறுவனத்திற்கு நேரில்சென்று மேலாளர் ப்ரித்விராஜிடம் “வட்டியைச் செலுத்த மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் 3 மாதகால அவகாசம் கொடுத்துள்ளன. அதுவரை பொதுமக்களை வட்டியைச் செலுத்த வற்புறுத்தக்கூடாது’’ எனக் கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து மேலாளர் ப்ரித்விராஜும் யாரையும் வட்டியைக் கட்டும்படி நாங்கள் வற்புறுத்த மாட்டோம் என உறுதியளித்தார்.
மேலும் இராஜபாளையம் தொகுதியில் தனியார் நிதிநிறுவனம், தனியார் வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில் கடன்வாங்கிய மகளிர் குழுக்களையும் பொதுமக்களையும், வியாபாரிகளையும் தவணை மற்றும் வட்டிகட்ட வற்புறுத்துவதைத் தடுக்கக்கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தி.மு.க. எம்.எல்.ஏ.வான தங்கபாண்டியன் மனு அளித்தார்.
மேலும் இந்தத் தவணையை ஆறு மாதங்களுக்கு அதிகரிக்கக் கோரியும், வட்டிகளைத் தள்ளுபடி செய்யக் கோரியும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.