தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள பா.ம.க.வுக்கு 23 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, அ.தி.மு.க. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க.- பா.ம.க. இடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதைத் தொடர்ந்து, கூட்டணியில் உள்ள மற்றக் கட்சிகளுடன் அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் தொடர்ந்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் உள்ள அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் அவருடன் தே.மு.தி.க.வின் முக்கிய நிர்வாகிகளான பார்த்தசாரதி, இளங்கோவன், அனகை முருகேசன் உள்ளிட்டோர் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர். இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் பங்கேற்றுள்ளார்.
ஏற்கனவே, நேற்றிரவு (27/02/2021) அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர் தே.மு.தி.க.வின் நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்தை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.