தேர்தலுக்காகவும், ஆட்சிக்காகவும் திமுகவை அண்ணா தொடங்கவில்லை; தமிழ் இனத்திற்காக தொடங்கப்பட்டதுதான் திமுக இயக்கம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு விசைத்தறியாளர்களுக்கு இலவசமாக வழங்கி வந்த 750 யூனிட் மின்சாரத்தை 1000 யூனிட் வழங்குவதாக அறிவித்தது. இதனையொட்டி விசைத்தறியாளர்கள் சார்பாக கோவையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்துகின்றனர். இதற்காக முதல்வர் ஸ்டாலின் கோவைக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் கோவையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 10000 பேர் திமுகவில் இணைந்தனர். இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர், “தேர்தலுக்காகவும், ஆட்சிக்காகவும் திமுகவை அண்ணா தொடங்கவில்லை; தமிழ் இனத்திற்காகத் தொடங்கப்பட்டதுதான் திராவிட இயக்கம். முதல்வர் பதவிக்காக இன்று கட்சி தொடங்கிய பல கட்சிகள் காணாமல் போயுள்ளனர். 1949-ல் தொடங்கப்பட்ட திமுக 1957 ஆம் ஆண்டு தேர்தலில் களம் கண்டது. அதில் 15 பேர் திமுக சார்பில் சட்டபேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அடுத்து 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அண்ணா தலைமையில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் திமுக ஆட்சியைப் பிடித்தது. தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அண்ணா கொண்டு வந்தார். ஓராண்டு காலத்தில் சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய அளவுக்கு தீர்மானங்களை கொண்டு வந்தவர் அண்ணா. இருமொழிக் கொள்கை, தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது உட்பட முக்கிய 3 தீர்மானங்களை அண்ணா நிறைவேற்றினார்” என்று திமுக கடந்து வந்த பாதைகள் குறித்து பேசினார்.