மதுரை மேற்கு தொகுதியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் சின்னம்மாள், நேற்று (17.03.2021) தெர்மோகோல் அட்டைகளுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து திமுக வேட்பாளராக சின்னம்மாள் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் போட்டியிட, திமுக முக்கிய நிர்வாகிகள் முட்டிமோதிக்கொண்டிருந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் சின்னம்மாள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். சின்னம்மாள், திமுகவில் மாநகர தெற்கு மாவட்டத்தில் துணைச் செயலாளராக உள்ளார். இருமுறை கவுன்சிலராக இருந்துள்ளார். 40 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் சின்னம்மாள், மதுரை விராட்டிப்பத்து மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் விஜயாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது சின்னம்மாள், கட்சியினருடன் 'தெர்மாகோல்' அட்டைகளுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். தெர்மாகோல் அட்டைகளில் அதிமுக அரசையும், அமைச்சர் செல்லூர் ராஜூவையும் விமர்சித்து பல்வேறு வாசங்களை திமுகவினர் எழுதியிருந்தனர்.
இதுகுறித்து சின்னம்மாளிடம் செய்தியாளர்கள், “எதற்கு தெர்மோகோல் அட்டைகளுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்ய வந்துள்ளீர்கள்?” என்று கேட்டனர். அதற்கு அவர், ''தெர்மாகோல் கொண்டு வந்ததில் ஒரு குறியீடு உள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சர், நீர் ஆவியாதலைத் தடுக்க விஞ்ஞானிபோல் யோசித்து, வைகை அணையில் தெர்மாகோல் அட்டைகளை விட்டார். அவர் அதைப் பெருமையாக நினைக்கலாம். அவரது விஞ்ஞானத்தை ஊரே கைகொட்டி சிரித்தது. தெர்மாகோல் விட்டதைத் தவிர வேறு எதையும் அவர் அமைச்சராக இருந்து சாதிக்கவில்லை.
அதேபோல், மதுரையை ‘சிட்னி’யாக்குவேன் என்கிறார். இதுவரை ஒரு சட்னி கூட அவர் தயார் செய்யவில்லை. வெள்ளந்திபோல் நடித்து மக்களை ஏமாற்றுகிறார். அவரை தோற்கடிக்கவே கட்சி என்னை களம் இறக்கியுள்ளது. அவரது அரசியலுக்கு இந்தமுறை முடிவு கட்டப்படும்'' என்றார்.